2,945 மில்லியன் ரூபா பெறுமதியான 294 கிலோ ‘ஹெரோயின்’ மாட்டியது! – இரு வாகனங்களுடன் இருவர் சிக்கினர்

கொழும்பு, கொள்ளுபிட்டிப் பகுதியில் உள்ள வாகனத் தரிப்பிடம் ஒன்றில் இருந்து ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 945 மில்லியன் ரூபா பெறுமதியான 294 கிலோ 490 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பாரியளவான ஹெரோயின் தொகை ஆகும்.

நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் குறித்த ஹெரோயின் தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது இரு வான்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாணந்துறை மற்றும் வாழைத்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த 32 மற்றும் 43 வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் விற்பனை செய்யும் நோக்கத்தில் குறித்த ஹெரோயின் தொகையை வைத்திருந்தனர் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவில் தடுத்துவைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் பின் இருவரும் இன்று (24) கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன், இருவரையும் தடுத்துவைத்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் அனுமதி கோரப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *