காட்டிக்கொடுப்பதே இ.தொ.காவின் அரசியல் ‘ஸ்டைல்’ – விளாசித்தள்ளுகிறார் வேலுகுமார் எம்.பி.!

” அமைச்சுப் பதவி இல்லையேல் அரசியல் இல்லை. காட்டிக்கொடுப்பு இல்லையேல் அரசியலில் கூட்டணி இல்லை. இதுதான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ‘அரசியல் ஸ்டைலாகும்’.

எனவே தான், தொழிலாளர்களை அப்பட்டமாகக் காட்டிக்கொடுத்துவிட்டு, அமைச்சர்களின் கைக்காலைப் பிடித்தாவது அரசாங்கத்துக்குள் நுழைவதற்கு இ.தொ.கா. பெரும்பாடுபடுகின்றது.”

இவ்வாறு ஜனநாயக  மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும்,  தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட  எம்.பியுமான வேலுகுமார்  சுட்டிக்காட்டினார்.

நாவலப்பிட்டிய ரிலாகல பகுதியில்  நிர்மாணிக்கப்பட்டுள்ள நடேசன்புரம்  வீடமைப்புத்  திட்டம் திறப்பு  விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்  இவ்வாறு சுட்டிக்காட்டினார்..

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘’பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி நடவடிக்கை எடுத்துள்ளது.  இதனை சாதனை வெற்றியாகவே நாம் கருதுகின்றோம்.

ஐக்கிய தேசிய முன்னணியில் பங்காளிக்கட்சியாக இருந்தாலும் சரணாகதி அரசியலை நடத்தவில்லை. அதனால்தான் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது அதை துணிவுடன் தட்டிக்கேட்கின்றோம். நீதியை வெற்றெடுப்பதற்காக போராடுகின்றோம்.

எமது இந்த கொள்கை அரசியல் பயணத்தைக் கண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்று மனம் நொந்துப்போயுள்ளது.

இதேநிலை தொடருமானால், காணாமல் போய்விடுவோம் என்ற அச்சத்தால், குறுக்கு வழியிலாவது அரசியலை நடத்தி முன்னேறிடவேண்டும் என நினைக்கின்றது.

இதனால்தான், தொழிலாளர்களை அப்பட்டமாக காட்டிக்கொடுத்துவிட்டு, அமைச்சர் நவீனின் காலைப்பிடித்தாவது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்குள் நுழைந்து அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொள்வதற்கு இதொகாவினர் பெரும்பாடுபடுகின்றனர்.

தொழிலாளர்களுக்கு வெறும் 20 ரூபாவை மட்டும் சம்பள உயர்வாகப் பெற்றுக்கொடுத்துவிட்டு, வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி எடுத்த நடவடிக்கையை அவர்கள் விமர்சிப்பது வேடிக்கையானதாகும்.

 கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறை விடுதலைப் பெற்றுக்கொடுத்துவிட்டது போல் இலங்கைத்  தொழிலாளர் காங்கிரஸ்  மார்தட்டுகின்றது. தமது கட்சியே மலையக மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற தொனியிலும் அக்கட்சியின் உறுப்பினர்களால் மலையகத்தில் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

90 காலப்பகுதியில் தான் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பம் முதல் நியாயமான விகிதத்தில் சம்பள உயர்வை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்திருக்குமானால் தற்போது அடிப்படை சம்பளம் ஆயிரத்தை தாண்டியிருக்கும்.

ஆனால், குறுகிய அரசியல் இலாபங்களுக்காகவும், குறுக்கு வழி அரசியலுக்காகவும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை பணயம் வைத்து தொழிற்சங்க பிழைப்பு நடத்திய இ.தொ.கா., நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கவில்லை. உரிமை அரசியல் குறித்தும் துளியளவும் சிந்திக்கவில்லை.

எமது சமூகம் இன்றைய 21 ஆம் நூற்றாண்டிலும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு இ.தொ.காவே பிரதான காரணமாகும். இப்படியெல்லாம் பொறுப்பற்ற விதத்திலும், பொதுநலன் மறந்தும் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய இ.தொ.காவினர், இன்று மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் போல் நடிக்கின்றனர்.

அதாவது, இதுவரையில் குறுந்திரைப்படத்தை ஓட்டியவர்கள் தற்போது ‘மெகா’ திரைப்படமொன்றை காண்பித்து, மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர்.

அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுடன் இணைந்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு துரோகதம் இழைந்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும்,  அதற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் மக்கள் இம்முறை சிறந்த பாடத்தை கற்பிப்பார்கள்.

மலையக மக்களை ஏமாற்றியகாலம் மலையேறிவிட்டது. எமது மக்கள் உரிமை அரசியலும் வேண்டும் என வலியுறுத்தும் காலம் உதயமாகிவிட்டது. அதற்கான தலைமைத்துவத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி வழங்கிவருகின்றது.

அனைத்து வழிகளிலும் வங்குரோத்து நிலையை எட்டியுள்ள சேவல்க் கட்சிக்காரர்கள், அரசியல் பயணத்தின் இறுதிகட்டமான சரணாகதி அரசியலை நடத்துவதற்கு தற்போது தயாராகிவருகின்றனர்.

எப்படியாவது ஐக்கிய தேசிய முன்னணிக்கு நுழைந்து, பதவிகளைப்பெற்றுவிடவேண்டும் என்பதே அவர்களின் தற்போதைய இலக்காக இருக்கின்றது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *