தேசிய பொருளாதாரக் கொள்கையால் வடக்கு அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாது!

“நாட்டின் தேசிய பொருளாதாரக் கொள்கை மூலம் வடக்கு மாகாணத்துக்கான அபிவிருத்தியை செய்ய முடியாது. மாகாணத்துக்கு என்று சிறப்பான பொருளாதாரக் கொள்கை வேண்டும்.”
– இவ்வாறு இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார அபிவிருத்திக் கட்டமைப்புக் குழு தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண பொருளாதார அபிவிருத்தி கட்டமைப்புத் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய காரியாலத்தின் வழிகாட்டலின் கீழ் பல்வேறுதுறை சார்ந்தவர்களை உள்ளடக்கிய குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையைத் தெளிவுபடுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது.
இந்த நிகழ்விலேயே அறிக்கையைத் தயாரித்த குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.
“வடக்கு மாகாணம் போரின் பின்னர் பொருளாதார ரீதியாக இன்னமும் மீண்டு எழவில்லை.
இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளது. சரியான திட்டமிடல் இன்மை முதன்மை காரணம். மக்களின் கடன் சுமை அதிகரித்துள்ளது. நிதி நிலைமைகளால் மட்டும் மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியாது.
முதலில் நாம் எமக்கான ஒரு பொருளாதார கொள்கையை வளர்க்க  வேண்டும்.
நாட்டின் தேசியப் பொருளாதார கொள்கையின் கீழ் எமது மாகாணத்துக்கும் அபிவிருத்தி செய்து விடலாம் என்று எண்ணுவது தவறு.
எமக்கான பொருளாதாரக் கொள்கைக்கு  பல்வேறு தரப்புகளிடம் இருந்தும்  கருத்துக்களை  பெற்றுக்கொள்வதற்கும், ஆராய்வதற்கும் தனியான  நிலையம் தேவை. ஆய்வு மையம் ஒன்று தேவை. முதலீடுகள் மட்டும் போதாது. அதற்கு முயற்சியும் வேண்டும்.
எமது மாகாணத்துக்குப் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் இளையோர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கக் கூடிய துறைகளை நாம் ஆராய வேண்டும்.
இங்கு நிலம், நீர் உண்டு. அதனை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்று சிந்திக்க வேண்டும்.
நாம் வெளியிட்டுள்ள அறிக்கை 10 ஆண்டுகளுக்குள்  மாகாணத்தில் பொருளாதார ரீதியான தேவைகளை இனம் கண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சருக்கு இந்த அறிக்கையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – என்று மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *