குளிப்பாட்டிய நாய்களை உலர்த்த புதிய சாதனம்

செல்லப்பிராணியான நாய்களை குளிப்பாட்டிய பின்னர், ஈரத்தன்மையை உலர்த்துவதற்கு வித்தியாசமான சாதனம் ஒன்று சந்தையில் அறிமுகமாகி உள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் மக்கள்  செல்லப்பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக நாய்கள் , பூனைகள் போன்ற விலங்குகள் அதிக அளவில் அனைவராலும் விரும்பப்படுகிறது.

சமீபத்தில் தென் கொரியாவில் குழந்தைகள் வளர்ப்பதை விட செல்லப்பிராணிகள் வளர்ப்பே அதிக மகிழ்ச்சி அளிக்கிறது என தம்பதிகள் தெரிவித்தனர்.

அந்த அளவுக்கு மக்களிடையே செல்லப்பிராணிகள் வளர்ப்பு வரவேற்பு பெற்று வருகிறது.

இதற்கு ஏற்றாற்போல் பல்வேறு நிறுவனங்களும் செல்லப்பிராணிகளுக்கான பல சாதனங்களை உருவாக்கி வருகின்றன.
அவ்வகையில்,  பஃப் என் ஃப்ளப் நிறுவனம், நாய்களுக்கான வினோதமான சாதனத்தை அறிமுகப்படுத்தி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
நாய்கள் வளர்ப்பில் முக்கிய சிரமமாக கருதப்படுவது அவற்றை குளிப்பட்டுவதுதான். நாய்கள் தெருக்களில் சேறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பின்பு அவற்றை குளிப்பாட்டி முடிகளை உலர்த்துவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.

இதற்கு 2 முதல் 3 மணி நேரம் வரை செலவிடப்படுகிறது.

இந்த சிரமத்தில் இருந்து விடுபடும் விதமாக, நாய்களை குளிப்பாட்டியபின் உலர வைப்பதற்காக, வித்தியாசமான டிரையர் ஒன்றை, பஃப் என் ஃப்ளப் வடிவமைத்து சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த டிரையரில் சிந்தடிக் கோட் ஒன்று உள்ளது. இதனை நாயின் உடலில் ஆடை போல் அணிவிக்க வேண்டும். அந்த கோட்டின் முனையில் இந்த டிரையர் இணைக்கப்பட்டிருக்கும்.

நாயின் முடிகளுக்கேற்றவாறு டிரையரின் வெப்பத்தை அட்ஜஸ்ட் செய்து, 5 முதல் 10 நிமிடங்கள் வரை உலர வைத்தால், இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

இந்த பிரத்யேக டிரையரின் விலை 39.95 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,855) ஆகும். இந்த சாதனம் 4 விதமான அளவுகளில் அமேசான் ஆன்லைனில் கிடைக்கிறது. செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் இதனை வாங்க பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *