பிரதமர் கைவிரித்தால் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதிப்போம் ! திகா அறிவிப்பு!!

” பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்வரும் முதலாம் ( 01.02.2019) திகதி நடைபெறவுள்ள பேச்சு வார்த்தை வெற்றியளிக்காத பட்சத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஹட்டனில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும்வரை மக்களோடு மக்களாக இணைந்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுப்போம்.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான பழனி திகாம்பரம்  அறிவிப்பு விடுத்தார்.

கொழும்பில்  இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

” கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக இம்முறையும் தோட்டத்தொழிலாளர்கள் அப்பட்டமாக காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளனர். 40 சதவீதம் சம்பள உயர்வு கிடைத்துவிட்டது என தொண்டாவும், சுரேசும் மார்தட்டினாலும் வெறும் 20 ரூபாவே ஊதிய உயர்வாக கிடைத்துள்ளது. இது பெரும் அநீதியாகும்.

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவாக 140 ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதம அமைச்சரிடம் எதிர்வரும்  முதலாம் திகதி கோரிக்கை முன்வைக்கப்படும்.

அதற்கு சாதகமான பதில் கிடைக்காதபட்சத்தில் அரசிலிருந்து வெளியேறுவது குறித்தும் ஆராயப்படும். அதுமட்டுமல்ல தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஹட்டனில் சத்தியாக்கிரகப்போராட்டத்தில் இறங்குவோம்.

மக்களை ஏமாற்றுவது இலகுவான விடயமென தொண்டமானும், வடிவேல் சுரேசும் நினைத்துக்கொண்டுள்ளனர்.

துரோகம் இழைத்துவிட்டு, தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துவிட்டு தான் அஞ்சமாட்டேன் என வடிவேல் சுரேஸ் வீராப்பு பேசுகிறார். அவர் நுவரெலியா பக்கம் வரட்டும்….! இத்தகைய நபர்கள் மலையகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள்.

அதேவேளை, எவர் தவறிழைத்தாலும் தவறு தவறுதான். ஜனாதிபதி, பிரதமர் என எல்லோருக்கும் இந்த கோட்பாடு பாருந்தும். குறைந்தப்பட்சம் 140 ரூபாவையாவது பெற்றுக்கொடுக்க வேண்டும். இல்லையேல் எமது நிலைப்பாடு மாறாது. நாம் சொல்வதை கட்டாயம் செய்வோம்.” என்றார்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *