வாக்குறுதிகள் நிறைவேறுவதற்காக இலங்கை மீது சர்வதேசத்தின் அழுத்தம் தொடர வேண்டும்! – ஆஸ்திரேலியாவிடமும் வலியுறுத்தியது கூட்டமைப்பு

“சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. இதை நிறைவேற்றுவதிலிருந்து விலக முடியாது. எனவே, இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதற்கு இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் தொடர்ந்து கடும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவராகக் கடமையாற்றி தனது சேவைக் காலத்தை நிறைவு செல்லும் பிரைஸ் ஹட்ச்ஸ்ன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவரது கொழும்பு இல்லத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளும் முழுமையாக இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவற்றை குறித்த காலவரையறைக்குள் நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களையும் இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும்.

தேவையற்ற விதத்தில் காலங்கள் கடத்தப்படுவதை – இழுத்தடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட ‘அரசியல் சூழ்ச்சிக்கு ஜனநாயக வழியில் தீர்வுகாண மேற்குலக நாடுகளும் அந்த நாடுகளின் தூதுவர்களும் ஜனாதிபதிக்குக் கொடுத்த அழுத்தங்களை நாம் மறக்கமாட்டோம்.

அதேவேளை, இலங்கையில் நீண்டகாலம் தொடரும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண இப்போது அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதற்காக ஆட்சியிலிருக்கும் அரசுக்கு நாம் சகல வழிகளிலும் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றோம்.

புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிக்காக எம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ளோம். புதிய அரசமைப்பு நிறைவேறாவிடின் இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லை.

எனவே, ஒருமித்த – பிரிபடாத – பிரிக்க முடியாத நாட்டுக்குள்ளே நிரந்தர அரசியல் தீர்வை எதிர்பார்க்கின்றோம். நாடு பிளவுபட்டு நிற்க நாம் விரும்பவில்லை.

எனினும், நியாயமான ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வு வந்தால் மட்டுமே நாமும் எமது மக்களும் ஆதரிப்போம்” – என்றார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *