வடக்கில் சிங்களக் கட்சிகள் ஆட்சி அமைக்கும் ஆபத்து! – எச்சரிக்கின்றார் செல்வம் எம்.பி.

“சிங்களக் கட்சிகள் வடக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்கக் கூடிய ஆபத்தான நிலை ஏற்படும்.”

– இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.

வவுனியா, பழைய கற்பகபுரத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாணத்தில் பல்வேறு கட்சிகள் காணப்படுவதனால் எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ வேறு சிங்களக் கட்சியோ வடக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்கக்கூடிய ஆபத்தான நிலை ஏற்படும்.

ரணில் எல்லாம் தருவார் என நாம் வாக்களிக்கவில்லை. எமக்கான அடிப்படைப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். அதேபோல் அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை முக்கியம்.

ஜனாதிபதி மைத்திரியும் மஹிந்தவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகக் கூறினார்கள். நாங்கள் மாறி ரணிலுக்கு வாக்களித்தவுடன் தற்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக இருந்தால் கைதுசெய்த இராணுவத்தினரை விடுவிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கு என்ன நடந்தது என்பதை ஜனாதிபதி கூறவேண்டும்.

நாங்கள் வெளியே நின்று ஆதரவு தெரிவித்தமையால் வெள்ளைவான் கடத்தல் இல்லை; மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கு ஏற்றக் கூடியவாறு உள்ளது. எமது உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய போராட்டங்களை முன்னெடுக்கக் கூடியதாக உள்ளது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *