போதை வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனையில் மாற்றம் இல்லை! – ஜனாதிபதி அறிவிப்பு

சட்டவிரோத போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராகக் கடந்த நான்கரை வருடத்துக்குள் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் எதிர்வரும் வாரங்களில் புதிய தோற்றத்துடன் செயற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதேபோல் போதை வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்குவதற்கு அரசு எடுத்த தீர்மானமும் எவ்வித மாற்றமும் இன்றி முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தை நேற்று முல்லைத்தீவில் ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் போதைப்பொருளை எதிர்ப்போம் என சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான நிதி உதவிகளும், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் படையினர் வசமிருந்த காணிகளின் ஒரு பகுதியை விடுவிக்கும் பத்திரங்களும் வழங்கப்பட்டன.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

“போதைப்பொருள் ஒழிப்பு சவாலில் வெற்றிபெற்றுள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி முன்னெடுத்த தீர்மானங்களை நான் முன்னெடுக்காமைக்குக் காரணம் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பயமல்ல.

சட்டவிரோத போதை வர்த்தகர்களுக்கு எதிராக முன்னெடுக்கும் கடும் நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை” – என்றார்.

அத்துடன் போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கான துரித தொலைபேசி இலக்கம் 1984 ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது

இந்த நிகழ்வில் அமைச்சர்களான தயா கமகே, ரிஷாத் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சி.சிவமோகன், அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான், தயாசிறி ஜயசேகர, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், யாழ்.மாவட்ட அரச அதிபர்கள், அரச திணைக்கள உயர் அதிகாரிகள், இராணுவத் தளபதி, பொலிஸ்மா அதிபர், கடற்படைத் தளபதி, கல்வித்திணைக்கள அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *