தமிழரின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக விதையாகியவர்கள் ஊடகவியலாளர்கள்! – செல்வம் எம்.பி. தெரிவிப்பு

“தமிழர்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியா தரணிக்குளம் பாடசாலை மைதானத்தில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ராகுலன் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்கள் மீது அண்மைக்காலமாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்வைத்துவரும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

“சுமந்திரனின் கருத்துக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. எனினும், போர்க்காலத்திலும் கூட எங்கள் மக்களின் பிரச்சினைகளை எழுதிய பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் பல தியாகங்களையும் செய்திருக்கிறார்கள். ஆகவே, விமர்சனம் என்பது ஒருவருடைய மனதைப் புண்படுத்தாத ரீதியில் செய்யப்படவேண்டும் என்பது என் கருத்து.

ஆனால், விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். விமர்சனங்களின் ஊடாகத்தான் அரசியலிலும், வேறு சில விடயங்களிலும் அதிகளவில் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

ஆகவே, எங்களது போராட்ட காலத்திலே முன்னணி வகித்த பல ஊடகங்கள், அதிலும் குறிப்பாக தமிழ் ஊடகங்களின் செயற்பாடுகள் மற்றும் அவர்களின் தியாகங்கள் மறக்க முடியாதவை.

பல ஊடகவியலாளர்கள் இறந்தும் இருக்கிறார்கள். நான் மிகவும் மதிக்கின்ற – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்த தராக்கி சிவராம் மற்றும் யாழ்ப்பாணத்திலும் பல ஊடகவியலாளர்கள் மரணித்திருக்கிறார்கள்.

இவர்களது தியாகங்களும் எங்களது இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு விதையாக அமைந்திருக்கின்றன.

தமிழ் ஊடகங்களின் தியாகங்களையும், துணிச்சலான எழுத்துக்களையும் எந்தக் காலத்திலும் விட்டுக்கொடுக்க முடியாது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *