புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு திரட்ட ஐ.தே.க. வியூகம் – மகாநாயக்க தேரர்களை சந்திக்கவும் முடிவு!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின் உயர்மட்ட குழுவொன்று விரைவில், மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளது என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
புதிய அரசியலமைப்பு வரைவுக்கான யோசனைகள் உள்ளடங்கிய நிபுணர்குழுவின் அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை ( 11) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து புதிய அரசியலமைப்பு அவசியமில்லையென பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அத்துடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகள் ஆகியன அரசியலமைப்புக்கு எதிராக அரசியல் போர் தொடுத்து வருகின்றன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் நிபுணர்கள் குழுவின் அறிக்கையை கையளித்து உண்மை நிலைவரத்தை ஐ.தே.க. முக்கியஸ்தர்கள் தெளிவுபடுத்தவுள்ளனர்.
” புதிய அரசியலமைப்புக்கான வரைவு நகல் இன்னும் தயாரிக்கப்படவில்லை. பௌத்தத்துக்கான முன்னுரிமை நீக்கப்படவில்லை. ஒற்றையாட்சி முறைமையும் நீடிக்கும்.
நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், புதிய அரசியலமைப்பை இயற்றும் பணி அத்துடன் முற்றுபெரும்.
நிலைமை இப்படி இருக்கையில் குறுகிய அரசியல் நோக்கில் மஹிந்த தரப்பினர் போலி பிரசாரம் முன்னெடுத்து வருகின்றனர். எனவே, உண்மை என்னவென்பதை சர்வமதத் தலைவர்களுக்கு தெளிவுபடுத்துவோம்.” என்று ஐ.தே.க. உறுப்பினர் ஒருவர் ‘புதுச்சுடர்’ இணையத்தளத்திடம் தெரிவித்தார்.
அதேவேளை, ஐ.தே.கவின் விசேட பிரதிநிதியாக பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான விஜேவர்தன அண்மையில் மகாநாயக்க தேரர்களை சந்தித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.