மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசி பெற்றார் வடக்கு ஆளுநர்!

வடக்கு மாகாணத்தில் மத நல்லிணகக்கத்தை மேலும் பலப்படும் நோக்கில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், யாழ்ப்பாணத்தின் சமயத் தலைவர்கள் சிலரை நேற்றும் பிற்பகல் மற்றும் இன்று காலை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

அத்துடன் நல்லூர் கந்தசுவாமி கோயில் மற்றும் நயினை நாகபூஷணி அம்மன் கோயில்களுக்கும் விஜயம் செய்த ஆளுநர், வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதி வண.மீஹகாஜதுரே விமல தேரரையும், நயினாதீவு விஹராதிபதி வண. நமதகல பத்மகித்தி தேரர் மற்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையையும் சந்தித்ததுடன் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார்.

வடக்கு மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவனை நியமித்தமையானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மிகச் சிறந்ததொரு தீர்மானமாவே தான் பார்ப்பதாகக் குறிப்பிட்ட யாழ்ப்பாணம் நாகவிஹாரை விஹாராதிபதி விமல தேரர், ஆளுநருடன் இணைந்து வடக்கில் மதங்களுக்கிடையில் நல்லுறவைக் கட்டியெழுப்ப ஒன்றுபட்டுச் செயற்படத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு வடக்கு மாகாணத்தில் நிலவும் போதைப்பொருள் பாவனைகள் தொடர்பில் விசேடமாக குறிப்பிட்ட விகாராதிபதி, இளைஞர்களை தவறான வழிக்கு இட்டுச்செல்லும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நேரடிக் கண்காணிப்பில் போதைப்பொருள் ஒழிப்புச் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதுடன் ஜனாதிபதியின் இந்தச் செயற்திட்டத்துடன் இணைந்து வடக்கில் இளையோரை தவறானை பாதைக்கு வழிநடத்தும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையுடனான சந்திப்பின்போது, வடக்கு மாகாண மக்கள் தற்போது எதிர்நோக்கும் உடனடி மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவை தொடர்பிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைளை மேற்கொள்ள தான் எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஆளுநர் முஸ்லிம் சமயத் தலைவர்களை நாளை வியாழக்கிழமை சந்திக்கவுள்ளார் என வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *