உணவு கொடுத்த பெண்ணிடமிருந்து கமராவை பறித்த யானை – கதிர்காமத்தில் சம்பவம்

யானையொன்றிற்கு உணவு கொடுக்க முயற்சித்த அவுஸ்திரேலியா பெண்ணின் கையிலிருந்த வீடியோ கெமராவை யானை பறித்துச் சென்ற சம்பவமொன்று, புத்தலை – கதிர்காமம் வீதியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து, கோனகங்கார பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, பொலிசார் பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு, யானையிடமிருந்து கீழே விழுந்த வீடியோ கெமராவை எடுத்து, அவுஸ்திரேலியா பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

புத்தலை – கதிர்காமம் வழியில் யானை ஒன்று அவ்வழியாக செல்லும் மக்களிடமும், வாகனங்களில் செல்வோரிடமும் உணவு வகைகளை பெற்றுக்கொண்டும் இருந்து வருகின்றது.

இந்நிலையில், அவுஸ்திரேலியா நாட்டுப் பிரஜையான பெண் உல்லாச பிரயாணியும், அவரது காதலனும் ஜீப் வாகனத்தில் அவ் வழியாகப் போகும் போது, யானை வருவோர் செல்வோரிடம் உணவு வகைகளை பெற்றுக்கொள்வதைக்கண்டு,

அவுஸ்திரேலியா பெண்ணும் உணவை ஒரு கையால் வழங்கிக்கொண்டு, மற்ற கையில் வீடீயோ கெமரா மூலம் பதிவு செய்து கொண்டும் இருந்தார்.

யானை அப்பெண்ணிடம் உணவை, தமது துதிக்கையினால் உணவை பெற்றுக்கொண்டதுடன், வீடியோ கெமராவையும் துதிக்கையினால் பறித்துக்கொண்டு, திரும்பியது.

தமது வீடியோ கெமரா பறிக்கப்பட்டமை குறித்து, அப்பெண் பொலிசாருக்கு தகவல் வழங்கவே, பொலிசார் உடனடி நடவடிக்கைகளை எடுத்து, பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு, யானையிடமிருந்து கீழே விழுந்திருந்த வீடியோ கெமராவை எடுத்து, அவுஸ்திரேலியா பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

அவுஸ்திரேலியா நாட்டின் பிரபல தொழிலதிபரான ஜெகொப் பேட் மற்றும் அவரது காதலியான மிலினா என்பவர் டாக்டராக கடமையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பெறுமதிமிக்க இவ் வீடியோ கெமராவைப் பெற்றுக்கொடுத்த கோனகங்கார பொலிசாரை, அவுஸ்திரேலியா பெண்ணும், அவரது காதலனும் வெகுவாகப் பாராட்டியதுடன், பொலிசாருக்கு நன்றியையும் தெரிவித்துச் சென்றனர்.

-பதுளை நிருபர்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *