பழிவாங்கும் நோக்கம் எமக்கில்லை! ரணிலின் குள்ளநரித்தனத்தை தமிழர்கள் விரைவில் உணர்வர்!! – சு.க. தெரிவிப்பு

“மைத்திரி – மஹிந்த கூட்டணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவில்லை என்ற காரணத்துக்காக தமிழர்களை நாம் ஒருபோதும் பழிவாங்க மாட்டோம். அந்தப் பழக்கம் எம்மிடம் இல்லை.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகரவும் டிலான் பெரேராவும் கூட்டாகத் தெரிவித்தனர்.

‘நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது. புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முற்போக்கானவர்களான தயாசிறி ஜயசேகரவும் டிலான் பெரேராவும் தலைமை தாங்கவேண்டும்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் யாழ்.வடமராட்சி கிழக்கில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார். இது தொடர்பில் சு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, டிலான் பெரேரா ஆகியோரிடம் தமிழ் ஊடகம் ஒன்று கேட்டபோதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்கள்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியமையால் எவ்வித பயனையும் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் பெறப்போவதில்லை. இருந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இழந்ததுதான் மிச்சம்.

ரணில் விக்கிரமசிங்க ஒரு நன்றிகெட்ட மனிதர். அவரின் குள்ளநரித்தனத்தை சம்பந்தன் குழுவினரும், தமிழ் மக்களும் விரைவில் உணர்வார்கள்.

அரைகுறைவான புதிய அரசமைப்பை நிறைவேற்ற நாம் ஒருபோதும் இடமளியோம். இருக்கின்ற ஒற்றையாட்சி அப்படியே இருக்கவேண்டும். அரசமைப்பில் மட்டும் எமது சம்மதத்துடன் திருத்தங்களை மட்டும் கொண்டு வரலாம்.

தற்போது இருக்கின்ற அரசமைப்பில் திருத்தத்தின் ஊடாகவே தமிழர்களுக்கு நியாயமான அதிகாரப் பகிர்வை வழங்க நாம் சம்மதிப்போம். ஆனால், சுமந்திரனின் அவசரத்தால் இதைத் தமிழர்கள் இழக்கநேரிடும் என்று நாம் கூறியதில் தவறேதும் இல்லை.

ஆயுத வழியில் பிரபாகரன் மோசமானவராகத் திகழ்ந்தார். இதனால் தமிழ் மக்கள் பெரும் இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தது.

இன்று இராஜதந்திர வழியில், பிரபாகரனைவிட நாட்டுக்கு மிகவும் ஆபத்தானவராக சுமந்திரன் செயற்படுகின்றார்.

இதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம். இதற்கு விரைவில் நாம் முடிவுகாண வேண்டும்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அருவருப்பான சம்பவங்களுக்கு ரணிலும் சுமந்திரனுமே முழுக்காரணம்.

இப்படியானவர்கள் தமிழர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் ஒருபோதும் தீர்வைக்கொண்டுவர மாட்டார்கள்” – என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *