மொட்டு கட்சியின் ஆதரவு யாருக்கு?: பிரசன்ன – நாமல் மோதல்

2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அறிவிக்கப்பட்ட போதும் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் ஆகியன இந்த ஆண்டு நடத்தப்படுமா இல்லையா என்ற கேள்வி பரவலாக எழுந்தது.

இந்த நிலையில், திட்டமிட்டதற்கமைய ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அண்மையில் அறிவித்தது.

அத்துடன், பொதுத்தேர்தலை 2025 இல் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் குறித்து எந்தவொரு கட்சியும் தீர்க்கமான முடிவினை எட்டாத நிலையில், இந்த விடையம் தொடர்பில் கட்சிகளுக்குள் முரண்பாடுகள் தொடர்கின்றன.

இதனிடையே, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை எனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வருவாரானால் அவருக்கு ஆதரவளிப்பதாகவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவது மொட்டு கட்சி உட்பட நாட்டை நேசிக்கும் அனைத்து தரப்பினரதும் கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொட்டு கட்சி எப்போதும் நாடு குறித்து சிந்தித்து தீர்மானங்களை எடுக்கும் என்பதால் தமது கட்சி சரியான நேரத்தில் அந்த தீர்மானத்தை எடுக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமது தலைவர்கள் எப்போதும் நாட்டிற்கு சரியானதையே செய்திருக்கிறார்கள் எனவும், இம்முறையும் மொட்டு கட்சியின் தலைவர் சரியான தீர்மானத்தை மேற்கொள்வார் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனைத்து திட்டங்களையும் பொதுஜன பெரமுன ஆதரிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும், அவர் மேற்கொள்ளும் அனைத்து தீர்மானங்களுக்கும் ஆதரவளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மொட்டு கட்சியை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் நிலைப்பாட்டில் ஒரு தரப்பும், ரணிலுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் மற்றைய தரப்பு இருப்பதனை அவதானிக்க முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *