சொத்து முழுவதையும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கும் ஹாலிவுட் நடிகர்!

தான் சினிமாவில் சம்பாதித்த பல கோடி ரூபாய் சொத்துக்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாக ஹாலிவுட் நடிகர், சோவ் யுன் பேட் தெரிவித்துள்ளார்.

பிரபல ஹாங்காங் நடிகர் சோவ் யுன் பேட் (Chow Yun-fat). ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

எ பெட்டர் டுமாரோ, தி கில்லர், ஹார்ட் பாயில்ட், கிரவுச்சிங் டைகர், ஹிடன் டிராகன், பைரேட்ஸ் ஆப் கரீபியன்: அட் வேர்ல்ட்ஸ் எண்ட் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர்,

2015 ஆம் ஆண்டு, போர்ப்ஸ் வெளியிட்ட அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார். இவர், தனது சொத்து முழுவதையும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

‘இந்த பணத்தை எப்போதும் வைத்திருக்க முடியாது. இறப்பிற்கு பின் அந்த சொத்துகளை கொண்டு செல்ல முடியாது.

ஒரு நாள் போய் சேர்ந்துவிட்டால், அதை மற்றவர்கள் பயன்படுத்த கொடுக்க வேண்டும்.

அதைதான் செய்கிறேன். என் இறப்பிற்கு பின் சொத்துக்களை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்க இருக்கிறேன். இந்த உலகில் எதும் நிரந்தரமானதல்ல.

இங்கு எதையும் நிரந்தரமாக வைத்துக்கொண்டிருக்க முடியாது என்று என் குரு கூறுவார்’ என்று குறிப்பிட்டுள்ள சோவ், தனது சொத்து மதிப்பு எவ்வளவு எனத் தெரியாது என்று கூறியுள்ளார்.

அதோடு, தான் நடித்த படத்தைக் கூட வரிசையில் நின்று டிக்கெட் வாங்கியே பார்க்கிறாராம் சோவ். மக்களோடு நின்று பேருந்திலேயே பயணம் செய்கிறார்.

எளிமையான வாழ்க்கையை வாழ விரும்பும் சோவ்-வின் முடிவுக்கு அவர் மனைவி, ஜாஸ்மின் டேனும் சம்மதித்துள்ளார்.

தனது சொத்து மதிப்பு தெரியவில்லை என்று இந்த மல்டி மில்லியனர் நடிகர் கூறினா லும் அதன் மதிப்பு 715 மில்லியன் அமெரிக்க டாலர் என்று தெரிவித்துள்ளது ஹாங்காங் மீடியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *