அதிஉயர் சபையில் அடிதடி – ஜனவரி இறுதியில் விசாரணை அறிக்கை! சமல், கஜதீர குழுவிலிருந்து விலகல்!!

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் குறித்தான விசாரணை அறிக்கை ஜனவரி மாதம் (2019) இறுதியில் சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது.

அதிஉயர் சபையில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட அடிதடி தொடர்பில் விசாரணை  நடத்துவதற்கு பிரதி சபாநாயகர் ஆனந்தகுமாரசிறி தலைமையில் விசேடகுழுவொன்றை சபாநாயகர் அமைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல்ராஜபக்ச, சந்திரசிறி கஜதீர, மாவைசேனாதிராஜா, ரஞ்சித் மத்தும பண்டார, பிமல் ரத்நாயக்க ஆகியோரும் குழு உறுப்பினர்களாக பெயரிடப்பட்டனர்.

எனினும், விசாரணைகளில் தாம் பங்கேற்கப்போவதில்லை என்று சமல்ராஜபக்ச, சந்திரசிறி கஜதீர ஆகியோர் சபாநாயகருக்கு அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த விசாரணைக்குழு இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் கூடியது. காணொளிகளை அடிப்படையாகக்கொண்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன், ஊடகநிறுவனங்களிடமிருந்தும் காணொளிகள் கோரப்பட்டுள்ளன.

அத்துடன், ஜனவரி  3 , 8 , 9 ஆம் திகதிகளில் மீண்டும் கூடி விசாரணை நடத்துவதற்கு மேற்படி  குழு தீர்மானித்துள்ளது.விசாரணைகள் முடிவடைந்தப்பின்னர் அறிக்கை ஜனவரி இறுதியில் அல்லது பெப்ரவரி முதல்வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும்.

நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 14, 15, 16 ஆம் திகதிகளில் ஆளும், எதிரணி உறுப்பினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டிருந்தது. 16 ஆம் திகதி மஹிந்த அணியினரால் மிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *