இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் பலி எண்ணிக்கை 2 இலட்சத்தை நெருங்குகிறது!

கொரோனா பரவலின் 2 அலை, உருமாறிய வைரஸ் தொற்றினால் பாதிப்போரின் எண்ணிக்கை உலகளவிலும், இந்தியாவிலும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நாட்டில் கொரோனா தொற்றினால் பலியாவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக, தொற்றினால் பாதிப்போரின் எண்ணிக்கை 3 லட்சங்களை கடந்துள்ள நிலையில், இறப்போரின் எண்ணிக்கையும் அதற்கேற்ப தொடர்ந்து 2 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதனிடையே, கான்பூர், ஐதராபாத் ஐஐடி விஞ்ஞானிகள் இணைந்து கணித அடிப்படையில் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், `நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மே 14 -18 தேதிகளில் 38-48 லட்சமாக இருக்கும். அதே போல், புதிதாக தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மே 4 முதல் 8ம் தேதிகளில் தினசரி 4.4 லட்சமாக இருக்கும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மே 11-15 தேதிகளில் 33-35 லட்சமாக இருக்கும் என்று ஐஐடி விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். தற்போது இந்த கணிப்பு மறுஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்துக்கான கொரோனா தொற்று பாதிப்பு, பலி, சிகிச்சை பெறுவோர், குணமடைந்தோர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

  • கடந்த 24 மணி நேரத்தில் தொற்றினால் 3 லட்சத்து 52 ஆயிரத்து 991 பேர் பாதித்ததால், மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கையானது 1 கோடியே 73 லட்சத்து 13 ஆயிரத்து 163 ஆக அதிகரித்துள்ளது.
    *நேற்று ஒரேநாளில் 2,812 பேர் வைரஸ் பாதித்து இறந்துள்ளதால், மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 95 ஆயிரத்து 123 ஆக உயர்ந்துள்ளது. இதில், 70 சதவீதத்தினர் இணை நோயினால் இறந்துள்ளனர்.
  • 28 லட்சத்து 13 ஆயிரத்து 658 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 1 லட்சத்து 95 ஆயிரத்து 123 ஆக இருந்த பலி எண்ணிக்கை, நாளை 2 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டை பலியாக்காதீர்கள்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது நேற்றைய டிவிட்டரில், ‘`விவாதித்தது போதும். மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும். பாஜ.வின் நிர்வாக முறைக்கு நாட்டை பலியாக்காதீர்கள்,’ என்று கூறியுள்ளார்.

ராணுவத்தில் ஓய்வு பெற்ற டாக்டர்களுக்கு அழைப்பு
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், பிரதமர் மோடியுடன் நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா 2வது அலையை சமாளிக்க, கடற்படை, விமானப் படையில் இருந்து கடந்த 2 ஆண்டுகளில் பணி ஓய்வு, விருப்ப பணி ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரிகள், ஊழியர்களை அவசர தேவைக்கு பயன்படுத்தி கொள்ள, அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராணுவத்திடம் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவமனைகளின் எண்ணிக்கை, ராணுவ மருத்துவ உட்கட்டமைப்பு அதிகரிக்கப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *