சர்வாதிகாரத்துக்குத் துணைபோன ஊடகங்கள் சரிநிகராகச் செய்திகளை வெளியிட வேண்டும்! – ஊடகத்துறை அமைச்சர் மங்கள வலியுறுத்து 

“கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம்திகதியிலிருந்து சர்வாதிகார ஆட்சிக்குத் துணைபோன ஊடகங்கள் இனிமேல் சரிநிகராக – நாட்டு மக்களின் நலன் கருதி – நல்லிணக்கத்துக்குக் குந்தகம் விளைவிக்காமல் செய்திகளை வெளியிட வேண்டும்.”
– இவ்வாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஜனாதிபதி முன்னிலையில் நேற்று முற்பகல் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராகப் பதவியேற்ற மங்கள சமரவீர, நேற்றுப் பிற்பகலே உத்தியோகபூர்வ அலுவலகத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றார். அதன் பின்னர் வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றின் இலங்கை செய்தியாளருக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஊடக சுதந்திரத்தை சில ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தியுள்ளன. ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சிக்கு சில ஊடகங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவை வழங்கியுள்ளன.
நாட்டில் மீண்டும் இரத்தக்களறி  ஏற்படக்கூடிய சம்பவங்களுக்கு ஊடகங்களும் துணைபோயுள்ளன என்பதை நினைக்கும்போது கவலையாக உள்ளன.
நாட்டின் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகம் விளங்குகின்றது என்பதை ஊடக நிறுவனங்களின் பொறுப்பதிகாரிகள்  உணராமல் நடந்துகொண்டுள்ளார்கள். இனிமேலாவது அவர்கள் திருந்தவேண்டும். எம்மைத் துதிபாடச் சொல்லி அவர்களிடம் நாம் கேட்கவில்லை. நடுநிலையுடன் மட்டும் செயற்பட்டால் போதும்.
அதேவேளை, ஜனநாயகத்தை விரும்பும் ஊடகவியலாளர்கள் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் ஊடகப் பணிகளைத் துணிவுடன் முன்னெடுக்க வேண்டும். அவர்களின் குறைநிறைகளை நாம் தீர்த்து வைப்போம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *