மட்டக்களப்பில் பொலிஸார் சுட்டுக்கொலை – பொட்டம்மானின் சகா கைது! விசாரணை வேட்டையில் விசேட குழு!!

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 48 வயதான ராசநாயகம் சர்வானந்தன் என்பவரே வட்டக்கச்சி பகுதியில் வைத்து இன்று முற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியிலுள்ள பொலிஸ் சாவடியொன்றில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் சடலங்கள் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டிருந்தன.

குறித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டிருந்தது.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் துப்பாக்கிகளும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்காக பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், பொலிஸ் மாஅதிபர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பிற்கு நேற்றைய தினம் நேரடியாக சென்று விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையிலேயே கிளிநொச்சி பொலிஸாரினால் குறித்த சந்தேகநபர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு துறையின் பொறுப்பாளர் பொட்டம்மானது, சண்டை அணியின் போராளியாக கடமையாற்றிய ஒருவரே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் எனவும் கிளிநொச்சி பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக வட்டக்கச்சி பகுதிக்கு சென்றுள்ள குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் சந்தேகநபர் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *