மைத்திரி – மஹிந்த கூட்டைத் தோற்கடிக்க ரணிலின் கூட்டணியில் சந்திரிகா சங்கமம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளைச் சமாளிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க செயற்படத் தொடங்கியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையின் கீழ் உருவாக்கப்படும் புதிய கூட்டணியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள சந்திரிகா திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.

இது தொடர்பான கலந்துரையாடல்கள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தக் கூட்டணியுடன் சந்திரிகாவும் இணையவுள்ளார். கூட்டணி தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. தலைமைச் சபையின் கீழ் இயங்கும் இந்தப் புதிய அரசியல் முன்னணி, எதிர்வரும் நாட்களில் ஆரம்பித்து வைக்கப்படும் எனக் கூறப்படுகின்றது.

பிரதான அரசியல் கட்சிகள் பிளவுபட்டுள்ள நிலையில், பல்வேறு பிரிவுகளாகப் பொதுத் தேர்தலில் ஈடுபடத் தயாராகி வருகின்றன.

இந்நிலையில், மைத்திரி – மஹிந்த கூட்டணியை வெற்றி கொள்ளும் நோக்கில் பலமான கூட்டணியை அமைக்கும் தீவிர முயற்சியில் சந்திரிகா நேரடியாக ஈடுபட்டுள்ளார் எனத் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *