கனடாவில் எதிர்வரும் மூன்று வருடங்களில் 1.2 மில்லியன் மக்கள் குடியேற வாய்ப்பு!

எதிர்வரும் மூன்று வருடங்களில் சுமார் 1.2 மில்லியன் புதிய குடிமக்களைக் கனடா வரவேற்க விரும்புகிறது என்று தெரிவித்தார் நாட்டின் குடியேற்ற அமைச்சர் மார்க்கோ மெண்டிஸீனோ.

அடுத்த வருடம் 401,000 பேரையும், அதற்கடுத்த வருடத்தில் 411,000 பேரையும், மூன்றாவது வருடத்தில் 421,000 பேரையும் கனடாவுக்குள் சேர்த்துக்கொள்ளத் தீர்மானம் செய்திருப்பதாக அவர் அறிவித்தார்.

கனடா நீண்ட காலமாகவே ஒரு குடியேற்ற ஈர்ப்பு நாடு என்பது பலருக்கும் தெரிந்த விடயமே. “கொவிட் 19 க்கு முன்னரே நாங்கள் எங்கள் நாட்டிற்கு மேலும் மக்களைத் தேவைக்கேற்றபடி இணைத்துக்கொள்ளவே விரும்பினோம். ஆனால், அதில் இடைஞ்சல் ஏற்பட்டுவிட்டது. தற்போதைய நிலையில் நாம் மிக அவசியமாக மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்,” என்கிறார் அமைச்சர்.

குடிமக்களின் சராசரி வயது அதிகமாகிக்கொண்டு போவதாலும் பல துறைகளில் வேலைகள் செய்வதற்கானவர்கள் தட்டுப்பாட்டாலும் கனடா தனது பொருளாதார அபிவிருத்திக்காக இளைய, கெட்டிக்கார மக்களின் குடியேற்றத்தை விரும்புகிறது. வரும் மூன்று வருடங்களில் கனடா தனக்குள் சேர்த்துக்கொள்ளப்போகும் மக்களின் தொகை 1911 க்குப் பின்னர் முதல் தடவை மிகவும் பெரியதாக இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *