பெரும்பான்மையை நிரூபித்தாலும் ரணிலுக்குப் பிரதமர் பதவி இல்லை! – மைத்திரி திட்டவட்டம்

“நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை நிரூபித்தாலும், மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கமாட்டேன். அவரை அழைத்துவர வேண்டாம் எனத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டேன்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“தனிநபருடனான முரண்பாடு காரணமாக நான் இந்த முடிவை எடுக்கவில்லை. இது கொள்கை ரீதியான தீர்மானமாகும். ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா ஆகிய இருவரையும்தவிர வேறு நபர்களுக்கு பிரதமர் பதவியை வழங்க நான் தயாராகவே உள்ளேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பாரதூரமான ஊழல் காரணமாகவே கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கினேன். என்னால் பிரதமர் பதவியில் அமர்த்தும் நபர், என்னுடன்  இணைந்து செயற்படக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும். அதுவே சம்பிரதாயமும்கூட. ரணில், பொன்சேகா ஆகியோருடன் என்னால் இணைந்து செயற்பட முடியாது. என்னைக் கொலை செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியுடன் பொன்சேகா தொடர்புபட்டுள்ளார்.ரணில் பிரதமர் பதவியிலிருந்தபோது பாரிய ஊழல், மோசடி தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. அது குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *