மேற்குலக இராஜதந்திரிகளோடு பேச்சு நடத்திய அரச தரப்பினர்! – நால்வரின் விவரங்கள் வெளியாகின

மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுடன், இரகசியப் பேச்சுக்களை நடத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி குழுவினர் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. நான்கு பேர் கொண்ட, அரச தரப்புக் குழுவே கடந்த செவ்வாய்க்கிழமை இந்த இரகசிய சந்திப்பை நடத்தியிருந்தது.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் தலைமையிலான இந்தக் குழுவில் அமைச்சர் மகிந்த சமரசிங்க, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பொது எதிரணியின் வெளிவிவகாரக் குழு உறுப்பினராக இருந்த தரிந்து பாலசூரிய ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

கொழும்பு, ரொரிங்டன் அவென்யூவில் உள்ள கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், சுவிற்சர்லாந்து, ஜப்பான், நோர்வே, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளின் இராஜதந்திரிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர் என்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, நீண்ட தாமதங்களால், நாட்டில் உறுதியற்ற நிலை ஏற்பட்டு வருவது குறித்து, பெரும்பாலான வெளிநாட்டுத் தூதுவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனினும், இந்த நிலைமைக்கு சபாநாயகரே பொறுப்பு என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *