கூட்டமைப்புக்குள் இன்னொரு வியாழேந்திரனா? சம்பந்தன் – சிறிதரன் காரசாரமான வாக்குவாதம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நேற்று அதன் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும் இடையே கடும் கருத்து மோதல் நடந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று மதியம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு பிரதிநிதிகள் கூட்டமைப்புக்குள் இருந்தபோது ஏற்பட்ட கடுமையான மோதலுக்குப் பின்னர், நேற்றைய சந்திப்பிலேயே மிகக் கடுமையான வார்த்தை மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதலின் உச்சக் கட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுக்களைச் சுமத்திய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், அவர் பிழையாக நடக்கிறார் எனக் குற்றம்சாட்டினார்.

நேற்று நாடாளுமன்ற அமர்வுகள் மதிய போசனத்துக்காக ஒத்திவைக்கப்பட்ட பின்னர், மதிய போசனத்தை முடித்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஒன்று கூடினர். அவசர சந்திப்புக்காக அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது, மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்வது பற்றி தலைவர் இரா.சம்பந்தன் விளக்கமளித்தார்.

ஒக்டோபர் 26ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது சட்டவிரோதம், நாடாளுமன்றத்தில் இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னரும் மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியில் தொடர்வது சட்டவிரோதம் என்று குறிப்பிட்டு வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், அதற்கு மஹிந்தவுக்கு எதிராக வாக்களித்த 122 எம்.பிக்களும் கையொப்பமிடவேண்டுமென்றும் இரா.சம்பந்தன் கோரினார்.

“இந்த அரசில் எமக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் நாங்களும் ஆதரவாக வாக்களித்தோம்” என்ற சத்தியக் கடதாசியிலேயே கையொப்பமிடக் கோரப்பட்டது.

மேலோட்டமான சில விவாதங்கள், கருத்து முரண்பாடுகளின் பின்னர் கூட்டமைப்பின் எம்.பிக்கள் கையெழுத்திடச் சம்மதித்தனர்.

அப்போது திடீரெனச் சிறிதரன் எம்.பி., தான் கையெழுத்திடமாட்டேன் என்றார். கையெழுத்திட வேண்டுமென இரா.சம்பந்தன் வற்புறுத்தினார். இரு தரப்பும் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க, சிறிது நேரத்தில் உக்கிரமான வார்த்தை மோதல் ஆரம்பித்தது.

மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரிப்பதற்கு நிபந்தனை விதித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கிறது எனச் சிறிதரன் கேள்வியெழுப்பினார்.

இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளுக்கிடையிலான மோதலில் நாங்கள் ஒரு தரப்பாக இருக்க வேண்டிய அவசியமில்லையென்றார். ரணிலிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் கூட்டமைப்பு அவரை ஆதரிப்பதாக சமூக வலைத்தளங்களிலும், பொதுமக்களிடமும் பகிரப்படும் கருத்துக்களை சிறிதரன் எம்.பி. சுட்டிக்காட்டினார். எனினும், இரா.சம்பந்தன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

“நீர் கையெழுத்திடாவிட்டால், மஹிந்த ராஜபக்‌ஷவிடம் காசு வாங்கிக் கொண்டுதான் கையெழுத்திட மறுத்ததாகத்தான் மக்கள் கதைப்பார்கள். ஏற்கனவே எங்களிடமிருந்து ஒருவர் போய்விட்டார். நீர் இரண்டாவது ஆளாகுவீர். தனியே உம்மை மட்டுமல்ல, கூட்டமைப்பையும் சேர்த்துத்தான் காசு வாங்கியதாக மக்கள் கதைப்பார்கள். மக்கள் மட்டுமல்ல, நானும் சொல்வேன் – நீர் மஹிந்தவிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் கையொப்பமிட மறுத்தீர் என்று” என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

இரா.சம்பந்தனிடமிருந்து இப்படியொரு கருத்து வருமென யாரும் எதிர்பார்க்கவில்லை. வழக்கமாக நிதானம் தவறாத சம்பந்தர் நேற்று அப்படி கதைத்தது சிறிதரனை மேலும் சீண்டியிருக்கவேண்டும். அவர் சம்பந்தர் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினார். சம்பந்தனும் பதிலுக்குக் குற்றம்சாட்ட, கடுமையான மோதலாகியது.

மோதலின் உச்சக் கட்டத்தில், “நீங்கள் செய்வதெல்லாம் பிழைதானே. யாழ். போதனா வைத்தியசாலை சிற்றூழியர் நியமனத்தில் என்ன செய்தீர்கள்? வடக்கில் எத்தனை பேர் வேலையில்லாமல் இருக்கின்றார்கள்? நீங்கள் சுகாதார அமைச்சரைப் பிடித்து உங்கள் மாவட்ட ஆட்களை நியமித்துள்ளீர்கள். இது சரியா? சொல்லுங்கள்” எனக் கிடுக்குப்பிடி பிடித்தார் சிறிதரன்.

அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. வரவு – செலவுத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பது தொடக்கம், அரசமைப்பு உருவாக்கப் பணிகளுக்காக வழங்கப்படும் நிபந்தனையற்ற ஆதரவு, அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களையெல்லாம் கடும்தொனியில் சிறிதரன் குறிப்பிட்டார்.

சம்பந்தனுக்கு ஆதரவாக எம்.ஏ.சுமந்திரனும் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். “சர்வதேசமும் தற்போதைய அரசுக்கு எதிராக இருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஒற்றுமையைக் குழப்பக்கூடாது” என்று கூட்டமைப்புத் தலைமையால் கூறப்பட்டது.

“சர்வதேச சமூகம் எமக்காக நிற்பதாக கூறுகின்றீர்கள். சரி, இப்போது நாம் கையொப்பமிடுவதால் எமக்குத் தீர்வை பெற்றுத்தருவார்கள் என இரண்டு நாடாவது வாக்குறுதியளித்ததா?” என சிறிதரன் கேள்வியெழுப்பினார்.

“கையெழுத்திடாவிட்டால், நான் ஊடகங்களின் முன்பாக நீர் குழப்பினீர் எனக் கூறுவேன்“ என இரா.சம்பந்தன் கூறினார்.

“ அரமைப்புப் பணிகள் தொடர்பாக நாங்கள் சில விமர்சனங்களை வைத்தபோது, எங்களை முட்டாள்கள் என்பதைப்போல ஒருமுறை கூறியிருந்தீர்கள். அதற்கு நாம் ஊடகவியலாளர் சந்திப்பு வைத்து பதிலளித்தோமா? அரமைப்பின் ஒற்றையாட்சித் தன்மை குறித்து நாம் பேசியபோது, சுமந்திரன் எமக்கு சமஷ்டியைப் பற்றித் தெரியாதென்றார். நாம் பகிரங்கமாகப் பதில் சொன்னோமா?. ஒற்றுமைக்காகத்தான் நாம் பொறுமையாக இருந்தோம்” என்றார் சிறிதரன்.

இடையிடையே மாவை சேனாதிராஜா குறுக்கிட்டபோது, மாவையைக் கடும் தொனியில் பேசி அடக்கினார் சிறிதரன்.

சிறிதரன் குற்றம்சாட்டியபோது, வாய் திறவாமல் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த சுமந்திரன், பின்னர் மெதுவாக “இங்கே பாருங்கள் சிறி… இது ரணிலை ஆதரிப்பதில்லை. நாங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் சத்தியக் கடதாசிதான்” என நீண்ட விளக்கமளித்து சமரசப்படுத்தினார்.

இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னரும் மஹிந்த பதவி விலகவில்லை. ஒருமுறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து பார்ப்போமே என்றும் சுமந்திரன் கூறினார்.

பின்னர், பல எம்.பிக்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.

“ஒற்றுமையென்று ஐயா சொல்கின்றார். அதனால் கையொப்பமிடுகின்றேன். ஆனால், எந்தச் சந்தர்ப்பத்திலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக கை உயர்த்தமாட்டேன்” எனக் கூறி, அந்த சத்தியக் கடதாசியில் சிறிதரன் கையொப்பமிட்டார்.

இதேவேளை, இந்தச் சம்பவத்துக்கு முன்னர் நேற்றுக் காலை நாடாளுமன்ற அமர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சிறிதரன் எம்.பியுடன் சுமந்திரன் எம்.பி. இரு தடவைகள் ஏதோ பேசினார். இதன்போது சிறிதரன் அவருடன் சபைக்குள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பின்னரே அவசரமாகக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது எனவும் தெரியவந்தது.

அத்துடன் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோர் சபையில் சிறிதரன் எம்.பியிடம் சென்று தமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரினர். இதன் பின்னரே சிறிதரன் கடும் கோபமடைந்தார் எனவும் அறியமுடிந்தது.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *