அதியுயர் சபையில் அடிதடி! சண்டியர்களாக மாறிய எம்.பிக்கள்!!

அடிதடி, அடாவடி, குப்பைவாளித் தாக்குதல், தூசன வார்த்தைப் பிரயோகம் என சாக்கடை அரசியலுக்கே உரிய அனைத்து அம்சங்களும் அதிஉயர் சபையான நாடாளுமன்றத்தில் இன்று (15) அரங்கேறின.

 
சபாபீடத்தை சுற்றிவளைத்து, சபாநாயகர்மீது தாக்குதல் நடத்துவதற்கு மஹிந்தவின் சகாக்கள் முற்பட்டவேளை, ஐக்கிய தேசியக்கட்சி எம்.பிக்களும் சபாபீடத்தை நோக்கி படையெடுத்துவந்தனர்.
 
இதையடுத்து இருதரப்பினருக்குமிடையே கடும் மோதல்ஏற்பட்டு, நாடாளுமன்றம் போர்க்களமாக காட்சிதந்தது.
 
உச்சகட்ட பாதுகாப்பு
இராஜதந்திரிகள் வருகை
 
பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. வழமைக்கு மாறாக நாடாளுமன்ற வளாகத்திலும், நாடாளுமன்றத்துக்குள்ளும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
 
சபைஅமர்வை பார்வையிடுவதற்காக அரசியல் பிரமுகர்களும், வெளிநாட்டு இராஜதந்திரிகளும் வருகைதந்திருந்தனர்.
சபையின் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக அறிவிப்பொன்றை விடுத்த சபாநாயகர் கருஜயசூரிய,
 
“ நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. எனவே, சபைக்குள் பிரதமர் என்று எவரும் அமரமுடியாது” என்று இடித்துரைத்தார்.
 
இதனால், கொதிப்படைந்த மஹிந்த அணியினர், சபாநாயகரின் அறிவிப்பை ஏற்கமறுத்ததுடன், ஜனாதிபதியால் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிராகரிக்கப்பட்டுவிட்டதாகவும் சுட்டிக்காட்டினர்.
 
கடுப்பாகிய மஹிந்த
கடுந்தொனியில் உரை
 
இதையடுத்து தன்னை பிரதமர் எனக் கூறிக்கொள்ளும் மஹிந்த ராஜபக்ச உரையாற்ற ஆரம்பித்தார்.
 
“ ஜனாதிபதி, பிரதமர் என அனைத்துப் பதவிகளையும் நான் வகித்துள்ளேன். எனவே, எனக்கு பதவி முக்கியமில்லை. நாடு அபாயத்தை நோக்கி பயணிப்பதை தடுக்கவே, ஜனாதிபதியின் கோரிக்கையின் பிரகாரம் பதவியேற்றேன்.
 
ஐக்கிய தேசியக்கட்சிக்கும், வெளிநாட்டு தூதரகங்களுக்கும் விசுவாசமானவராகவே சபாநாயகர் செயற்படுகின்றார். நாடாளுமன்ற வரலாற்றில் நேற்றுதான் இருண்டநாள்.” என்று ஆவேசம்பொங்க உரையாற்றினார்.
 
அத்துடன், எரிபொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் குறைக்கப்படும் என அறிவித்த மஹிந்த, ஐக்கிய தேசியக்கட்சிமீதும் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்தார்.
இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் ஐ.தே.க. எம்.பிக்களும் கருத்துகளை முன்வைத்தனர்.
 
மஹிந்தவின் உரைமீது
வாக்கெடுப்பு வேண்டும்
 
பெரும் கூச்சல், குழப்பத்துக்கு மத்தியில் மஹிந்தவின் உரை நிறைவுக்குவந்தகையோடு, அவரின் உரைமீது நம்பிக்கையில்லை. எனவே, வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை லக்ஸ்மன் கிரியல்ல முன்வைத்தார்.
 
இதையடுத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கு சபையின் அனுமதியை சபாநாயகர் கோரினார். அவ்வேளையிலேயே அமளிதுமளி உக்கிரமடைய ஆரம்பித்தது. எதிரணி பக்கம் அமர்ந்திருந்த எம்.பிக்கள் எழுந்துநின்று, லக்ஸ்மன் கிரியல்லவின் யோசனையை வழிமொழிந்தனர்.
 
 
எழும்ப மறுத்த சிவசக்தி எம்.பி.
சபாபீடம் முற்றுகை
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களும் எழுந்துநின்று வாக்கெடுப்புகோரினாலும், சிவசக்தி எம்.பி. மட்டும் தனது ஆசனத்திலிருந்து எழும்பவில்லை. அவரை எழுப்புவதற்கு துரைரட்னசிங்கம் எம்.பி. முயற்சித்தாலும், அதற்கு சிவசக்தி எம்.பி. இணங்கவில்லை.
 
மஹிந்தவின் உரைமீது வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆளுங்கட்சி பக்கம் அமர்ந்திருந்த மஹிந்த, மைத்திரி அணியினர் போர்க்கொடி தூக்கினர். எனினும், பெயர்கூவி வாக்கெடுப்பு நடத்துவதற்குரிய கட்டளையை சபாநாயகர் பிறப்பிக்க முற்பட்டதால் மஹிந்த அணியினர் சினம்கொண்டனர்.
 
இருக்கைகளிலிருந்து எழுந்து சபாபீடத்தை நோக்கிவந்து, சபாபீடத்தையும், சபாநாயகரையும் சுற்றிவளைத்தனர்.
சபாநாயகரை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சி எம்.பிக்களும் சபாபீடத்தை நோக்கிவந்தனர்.
 
சாபீடம் முற்றுகை
சபாநாயகரை தாக்க முயற்சி
 
இதனால் சபைக்குள் பதற்றநிலை உச்சம்தொட்டது. படைக்கள சேவிதர், செங்கோலை தூக்கிசென்றார். சபாநாயகரை கடுமையாக திட்டிய மஹிந்த அணியினர், சபாபீடத்திலிருந்த ஆவணங்களைக் கைப்பற்ற முயற்சித்தனர். அதை ஐக்கிய தேசியக்கட்சி எம்.பிக்கள் தடுத்தனர். இதையடுத்தே கருத்துமோதல், அடிதடிவரை சென்றது.
 
இருதரப்பினதும் பின்வரிசை எம்.பிக்கள் முட்டிமோதிக்கொண்டனர். உதயபத்சமாந்த, ரோகித அபேகுணவர்தன, சிசிர ஜயக்கொடி, மஹிந்தானந்த அளுத்கமகே, பிரசன்ன ரணவீர, ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ திலும் அமுனுகம உள்ளிட்ட மஹிந்த அணி எம்.பிக்கள், முஸ்டியை முறிக்கிக்கொண்டு, சபைக்குள் சண்டியர்கள்போல் செயற்பட்டனர்.
 
மங்கள சமரவீர, நவீன் திஸாநாயக்க, தயாகமகே, ரஞ்சன் ராமநாயக்க போன்ற ஐக்கிய தேசியக்கட்சி எம்.பிக்கள், சபாநாயகரை சூழ்ந்துக்கொண்டு அவரை பாதுகாத்தனர். ஹரின்பெர்ணான்டோ, முஜிபூர் ரஹ்மான், மரிக்கார் போன்ற எம்.பிக்கள் மஹிந்த அணியுடன், நேருக்குநேர் சொற்போரில் ஈடுபட்டனர்.
 
சமசர முயற்சியில்
மூத்த உறுப்பினர்கள்
 
இந்நிலையில் சஜித் பிரேமதாச, ரவிகருணாநாயக்க, ரிசாட் பதியூதின், பந்துலகுணவர்தன உள்ளிட்ட சிரேஸ்ட உறுப்பினர்கள், அவைக்குள் அமைதியை ஏற்படுத்துவதற்காக இருதரப்பு எம்.பிக்களையும் சமரசப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். எனினும், கூச்சல், குழப்பம் ஓயவில்லை.
 
சபாநாயகருக்கு முன்பிருந்த ஒலிவாங்கியை திலும் அமுனுகம எம்.பி. உடைத்துவீசினார். இதனால், அவருக்கு காயம் ஏற்பட்டது.
 
அத்துடன், சபாநாயகரை நோக்கி குப்பைவாளி (டஸ்பின்) வீசப்பட்டதுடன், தண்ணீர்போத்தலும் வீசப்பட்டது. கோவைகளும் தூக்கிவீசப்பட்டன. தூசன வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெற்றன.
 
பதற்றநிலை உச்சம் தொட்டதால், 10.45 மணியளவில் சபாபீடத்தைவிட்டு சபாநாயகர் வெளியேறினார். நாடாளுமன்றமும் 21 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.
சபாநாயகரை தாம் வெளியேற்றிவிட்டோம் என சபைக்குள் மஹிந்த அணி கோஸம் எழுப்பி, வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. ரணில் கள்ளன் என மஹிந்தவின் சகாக்களும், மஹிந்த கள்ளன் என்று ரணிலின் சகாக்களும் குரல் எழுப்பினர்.
 
சபாபீடமானது மோதல் களமாக மாறி, எம்.பிக்கள் முட்டிக்கொண்டாலும் மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் தமது ஆசனங்களிலிருந்து ஒரு அடியேனும் நகரவில்லை.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜே.வி.பி. ஆகியவற்றின் எம்.பிக்கள், சபைக்குள் அரங்கேறும் காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்தனர்.
 
அதிஉயர்சபையாக கருதப்படுகின்ற – பார்க்கப்படுகின்ற நாடாளுமன்றமானது சில எம்.பிக்களின் நடவடிக்கையால், கேலிக்கூத்து சபையாகவும், மோதல் களமாகவும் மாறியுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும். நேர்வழியில் அரசியல் நடத்துகின்றவர்களுக்கும், இவர்களின் செயற்பட்டால் சமூகத்தின் மத்தியில் அவப்பெரும் உருவாகும்நிலை ஏற்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *