அரசியல் தீர்வுக்காக சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் உரிய தருணம் இதுவே! – அனைவரும் அணிதிரள அறைகூவல் விடுக்கிறார் சரவணபவன்

“ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதற்காக சர்வதேச சமூகம் உள்ளிட்ட பல தரப்புக்களும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன. ஆனால், தற்போது எழுந்துள்ள நிர்க்கதி நிலையால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சி கைகூடாமல் போய்விட்டமை தொடர்பிலோ, இந்த நாட்டின் அரசமைப்புக்கு உட்பட்டு தமிழ் மக்களுக்கு கிடைக்கும் அரசியல் தீர்வு எதிர்காலத்தில் அதிகார வர்க்கத்தால் நசுக்கப்படும் என்பது பற்றியோ எவரும் கவலைகொள்வதாகத் தெரியவில்லை. சர்வதேச சமூகத்தின் கவனம் இலங்கையின்பால் ஈர்க்கப்பட்டுள்ள இந்தத் தருணத்தில், தமிழ் மக்கள் தங்களின் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைப்பதற்குப் பொருத்தமான தருணம் இதுவே. அதற்கான போராட்டங்களை ஆரம்பிக்க தமிழ் மக்கள் அணிதிரளவேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

மறந்துவிட்டார்கள்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அதிகார – அரசியல் மோதலால் அதிகம் பாதிக்கப்பட்டு நிற்பது தமிழ் மக்கள்தான். ஜனநாயக விரோதமாக ஜனாதிபதி மைத்திரிபால எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கவலைப்படும் சர்வதேச சமூகம் உள்ளிட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தமிழ் மக்களின் தீர்வு கானல் நீராக்கப்பட்டுள்ளதை கண்டுகொள்ள மறந்துவிட்டார்கள்.

ஆயுதப் போராட்டம் சர்வதேச சமூகங்களின் பங்களிப்புடன் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் எழுந்தது. இலங்கையின் ஆட்சியாளர்களும் அதற்கு இணங்கினார்கள். நான் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளான நாங்கள், ஒருமித்த – பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வு காண்பதற்கு முயற்சித்தோம்.

முன்னைய ஆட்சியாளர் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அவருடன் ஒரு ஆண்டு காலமாக பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தினோம். எதுவும் நடக்கவில்லை. தமிழ் மக்கள் நியாயமான, நிரந்தரமான தீர்வை எதிர்பார்த்து ஆட்சி மாற்றத்தை ஆதரித்தார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. சர்வதேச சமூகமும் இதற்கு கணிசமான அழுத்தங்களைக் கொடுத்தன.

கைநழுவியது

முற்றுமுழுதாக எங்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாக இல்லாவிடினும், தற்போதுள்ளதை விட ஓரளவு கூடிய அதிகாரங்களை வழங்கக் கூடிய அரசமைப்பு உருவாகி அது அரசியல் நிர்ணயசபைக்கு சமர்பிக்கப்படும் நிலமை வரையில் வந்தது.

காலம் காலமாக இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான ஒவ்வொரு தீர்வு முயற்சிக்கும் என்ன நடக்குமோ, அதுவே தற்போதும் நடந்தது. பிரிந்திருந்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள், தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கின்றது என்றதும் எப்படியோ ஒன்றிணைந்து அதைத் தூக்கிக் கடாசிவிடுவார்கள். இப்போதும் அதுவே நடந்திருக்கின்றது.

ஆனால், சர்வதேச சமூகம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பும், அதனை மறந்துவிட்டன. எல்லோரும் பிரதமர் மாற்றம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என்று ஜனாதிபதியின் அரசமைப்பு மீறலுக்காக ஒப்பாரி வைக்கின்றார்கள். ஆனால், தமிழ் மக்கள் நடுத்தெருவில் விடப்பட்டிருப்பதை ஏன் கண்டுகொள்ளவில்லை?

இலங்கையின் செய்தி

சர்வதேச சமூகத்துக்கு இலங்கை தெளிவாக ஒரு செய்தியைச் சொல்லியிருக்கின்றது. எந்த அழுத்தங்கள் வந்தாலும் அரசமைப்பை தூக்கிக் குப்பைக்குள் போட்டு விட்டு எதையும் செய்வோம். அதை எவராலும் தடுக்க முடியாது என்று சொல்லாமல் சொல்லியிருக்கின்றார்கள். இப்படியானதொரு சூழலில் இலங்கையின் அரசமைப்புக்கு உட்பட்டு வழங்கப்படும் தீர்வு மாத்திரம் தமிழர்களுக்கு நிரந்தரமாக அமையும் என்று எப்படி எதிர்பார்ப்பது?

தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நிரந்தரத் தீர்வு கிடைக்கவேண்டும். அந்தத் தீர்வை இலங்கை ஆட்சியாளர்கள் வழங்கப்போவதில்லை என்பதும் திண்ணம். எனவே, சர்வதேச சமூகம், இலங்கையின் ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்கும்போது இலங்கை என்ற நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு மறுதலிக்கப்பட்டுள்ள தீர்வைப் பற்றியும் கரிசனை செலுத்த வேண்டும்.

அணிதிரள்வோம்

ஆயுதங்களைக் கைவிட்டு, அஹிம்சை ஊடாக தீர்வுகளைக் காணவிரும்பும் தமிழ்ச் சமூகத்தின் எதிர்ப்பார்ப்புக்கள் நிராசையாகக் கூடாது. இலங்கை மீது சர்வதேச சமூகத்தின் கவனிப்பு குவிந்துள்ள இந்தத் தருணத்தில், எமக்கான தீர்வைப் பெற்றுத் தரவேண்டிய சர்வதேச சமூகத்திடம் அதற்கான கோரிக்கையை அழுத்தம் திருத்தமாக முன்வைக்க நாம் அணிதிரள்வோம் – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *