மைத்திரி – மஹிந்த கூட்டுச் சதியை ஓரணியில் நின்று தோற்கடிப்போம்! – அலரிமாளிகையில் திரண்ட ரணிலின் ஆதரவாளர்கள் கோஷம்
அரசமைப்பு சட்டத்தை மீறி நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நள்ளிரவு கலைத்தவுடன் அலரிமாளிகையில் அவசரமாக ஒன்றுகூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தனர்.
இவர்கள் தற்போதும் அலரிமாளிகையில் தங்கியிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
“துரோகி துரோகி மைத்திரி துரோகி!”, “மைத்திரியே உனக்கு மன்னிப்பே கிடையாது!”, “மைத்திரியை வீட்டுக்கு அனுப்பும்வரை தொடர்ந்து போராடுவோம்”, “மைத்திரி – மஹிந்த கூட்டுச் சதியை ஓரணியில் நின்று தோற்கடிப்போம்”, “எங்கள் தலைவர் ரணிலே”, “எங்கள் பிரதமர் ரணிலே”, “மக்களின் ஆணைபெற்றவர் ரணிலே” என்று ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
19ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், நாடாளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லாத நிலையில், ஜனாதிபதியின் நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.