டொலருக்காக திண்டாடும் இலங்கை நாடு மோசமான நிலையில்!

இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் விளிம்புநிலையில் இருப்பதனை தற்போது நாட்டில் இடம்பெறும் நிகழ்வுகள் எடுத்துணர்த்துவதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவிக்கின்றார்.

கொரோனா காரணமாக ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளநிலையிலும் வெளிநாட்டவர்கள் வருகை கணிசமாக குறைவடைந்துள்ளதன் காரணமாக சுற்றுலாத்துறை கடும் சரிவைச் சந்தித்துள்ள நிலையிலும் ,அமெரிக்க டொலர்களின் வரவு அருகிவிட்டநிலையில்

வெளிநாட்டுக்கடன்களை பெரும் எண்ணிக்கையில் திரும்பிச்செலுத்தவேண்டிய நிர்ப்ந்தத்திலுள்ள இலங்கை, டொலரை கொண்டுவருவதற்காகவும் இருப்பதைத் தக்கவைப்பதற்காகவும் பெரும் பிரயத்தனத்தில் இறங்கியுள்ளது என பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர்கள் தமது பொருட்களுக்கான கொடுப்பனவிற்காக டொலரைப் பெறுவதில் பெரும் இக்கட்டுநிலையை எதிர்நோக்கி நிற்கின்றனர்.

வெளிநாட்டு ஏற்றுமதிக்கான பொருட்களை தயாரிக்கின்ற மூலப்பொருட்களை இறக்குமதி செய்துள்ள உள்நாட்டு வர்த்தகர்களின் கொள்கலன்கள் பலவும் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

இதற்கு பொருட்களை விற்பனை செய்கின்றவர்களுக்கான கொடுப்பனவுகளைச் செய்வதில் டொலருக்கு திண்டாடும் இலங்கை வங்கிகள் காண்பிக்கின்ற மந்தநிலை காரணமாகக் கூறப்படுகின்றது.

” நான் இலங்கையிலுள்ள பெரிய இறப்பர் உற்பத்தியாளருக்கும் பலதரப்பட்ட விலங்குத் தீனி உற்பத்தியாளருக்கும் மேலும் பலருக்கும் மூலப்பொருட்களைக்கொண்டுவருபவன் நான். ” என்றார் உள்நாட்டு இறக்குமதியாளரொருவர்.

தற்போது இறக்குமதி செய்த பொருட்களை கொள்கலன்களில் இருந்து வெளியே எடுக்கமுடியாத நிலையை எதிர்நோக்கியுள்ள இவர் இந்த நிலைமையை விபரிக்கையில்,

“வழமையாக வெளிநாட்டு விற்பனையாளர் தனது வங்கியில் இருந்து இலங்கையிலிருக்கும் வாடிக்கையாளரின் வங்கிக்கு ஆவணங்களை அனுப்பிவைப்பார். தனது ஆவணங்களை வழங்குகின்ற வங்கிக்கு வாடிக்கையாளர் பணத்தைச் செலுத்துவார். அதன்பின்னர் உள்ளூர் வங்கி கொள்வனவிற்கான கொடுப்பனவினை வெளிநாட்டு விற்பனையாளரின் வெளிநாட்டிலுள்ள வங்கிக்கு டொலரில் கட்டாயமாக செலுத்தவேண்டியது அவசியமாகும் .”

ஆனால் தற்போது கப்பலில் பொருட்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வரும்போது அவற்றை எடுப்பதற்கு ஆவணங்கள் வழங்கப்படவில்லை. இதற்கு இலங்கை வங்கி விற்பனையாளரின் வங்கிக்கு டொலரில் கொடுப்பனவைச் செலுத்தத்தவறியமையே காரணமாகும்  என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 29 பில்லியன் அமெரிக்க டொலர்களை ( 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாவை) வெளிநாட்டுக்கடனாக செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இலங்கை இந்தஆண்டில் மாத்திரம் 4பில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிகமான தொகையை செலுத்தவேண்டியுள்ளது.

டொலருக்கு திண்டாடும் இலங்கை அரசாங்கம் அண்மையில் கடும் நடவடிக்கைகள் சிலவற்றை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி புலம்பெயர் கொடுப்பனவின் கீழ் இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்கள் தங்கள் நாட்டுக்கு பணம் அனுப்புவது தொடர்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்கு அனுப்புவது இடைநிறுத்தம்
அதற்கமைய, இலங்கையிலுள்ள ஏதேனும் சொத்திலிருந்து தனது உடனடி குடும்ப உறுப்பினரொருவரிடமிருந்து புலம்பெயர்ந்த ஒருவரினால் பண அன்பளிப்புகளாக பெறப்பட்ட நிதியங்களிலிருந்து புலம்பெயர் முற்கொடுப்பனவின் கீழ் நிதியங்களை தமது சொந்த நாட்டுக்கு அனுப்புவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

10,000 டொலராக மட்டுப்பாடு

அத்துடன், ஏற்கனவே பொதுவான அனுமதியின் கீழ் புலம்பெயர் முற்கொடுப்பனவை கோரும் புலம்பெயர்ந்தவர்களினால் மூலதன கொடுக்கல் வாங்கல் ரூபாய்க் கணக்குகளின் ஊடாக புலம்பெயர் முற்கொடுப்பனவின் கீழ் நிதியங்களை சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்புவதை உச்சபட்சம் 10,000 அமெரிக்க டொலராக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *