கொழும்பில் மைத்திரிக்கு எதிராக ஐ.தே.க. மாபெரும் வாகனப் பேரணி! – அலரிமாளிகைக்கு முன்பாக நின்று ரணில் கையசைப்பு

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்டாது அரசமைப்புக்கு விரோதமான முறையில் – ஜனநாயகத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் மாபெரும் வாகனப் பேரணி கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

காலிமுகத்திடலுக்கு முன்பாக இருந்து இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பித்த இந்த எதிர்ப்புப் பேரணி மாலை 4 மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள டி.எஸ்.சேனாநாயக்கவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்தலுடன் நிறைவுக்கு வந்தது.

ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்தின் தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியில் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிக்கள் கலந்துகொண்டனர்.

இந்தப் பேரணி நூற்றுக்கணக்கான வாகனங்களின் அணிவகுப்புடன் காலிமுகத்திடலிலிருந்து புறப்பட்டு கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டாரத்தைக் கடந்து அலரி மாளிகை அருகினால் பயணித்தது.

ரணில் கையசைப்பு

அலரிமாளிகை அருகினால் இந்தப் பேரணி பயணித்தபோது ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகைக்கு முன்னால் நின்று பேரணிக்காரர்களை நோக்கி கையசைத்த வண்ணமிருந்தார்.

இதனை அவதானித்த பேரணிக்காரர்கள், “ரணில் விக்கிரமசிங்கவே எமது பிரதமர்”, “அரசமைப்புக்குட்பட்ட தலைவர் ரணிலே”, “மக்களின் பிரதமர் ரணிலே”, “எமது தலைவரைக் காப்பாற்றுவோம்”, “ஜனாதிபதியே அராஜகத்தைக் கைவிடு! ஜனநாயகத்தை நிலைநாட்டு!!” என்று விண்ணதிரக் கோஷமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *