சபாநாயகருக்கும் சமாதி கட்டுவோம்! கொழும்பு பேரணியில் மைத்திரி – மஹிந்த கூட்டணி எச்சரிக்கை!!

“நாடாளுமன்றத்தை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் கூட்டுவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய நடவடிக்கை எடுப்பாரானால், அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”

– இவ்வாறு மைத்திரி – மஹிந்த கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஆதரவு தெரிவித்து ‘ஜன மகிமய’ என்ற பெயரில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று கொழும்பில் பாரிய பேரணியை நடத்தி வருகின்றது.

நாடாளுமன்ற வளாகத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் நடைபெறும் இப்பேரணியில், ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சுஜித் பிரேமஜயந்த மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார்.

“ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்துவிட்டு அரசமைப்பின் பிரகாரமே மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இது தவறெனில் ஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்தை நாடியிருக்கலாம்.

ஜனாதிபதி அரசமைப்பின் பிரகாரம் செயற்பட்டுள்ளார் என்பதை அறிந்துவைத்துள்ளதாலேயே அக்கட்சி நீதிமன்றத்தை நாடவில்லை.

அலரிமாளிகையைவிட்டு இன்னும் 48 மணிநேரத்துக்குள் ரணில் விக்கிரமசிங்கவும் அவரின் சகாக்களும் வெளியேறவேண்டும். இல்லாவிட்டால் அலரிமாளிகையை நோக்கி நாம் படையெடுப்போம்.

அதேபோல் நாடாளுமன்றத்துக்குள் பக்கசார்பற்றவராகவே சபாநாயகர் செயற்படவேண்டும். 16ஆம் திகதிக்கு முன்னர் சட்டத்துக்கு முரணான வகையில் அவர் நாடாளுமன்றத்தைக் கூட்டினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம்” – என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *