சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக நீதிமன்றை நாடுகிறார் செல்வம்!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக மானநஷ்ட வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு பல கோடி ரூபாவைச் செல்வம் அடைக்கலநாதன் பெற்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பாக கூறும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட சிவசக்தி ஆனந்தன், நான் பல கோடி ரூபா பெற்றுக்கொண்டதாகவும் அது இந்தியாவிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்.

இது சம்பந்தமாக அவருக்கு எதிராக நான் நீதிமன்றம் செல்ல இருக்கின்றேன். மானநஷ்ட வழக்குப் போடுவதற்கான முயற்சியை நான் எனது வழக்கறிஞர்களோடு கலந்துரையாடி வருகின்றேன்.

அந்தவகையிலேயே 150 கோடி ரூபா மானநஷ்டஈட்டை அவரிடம் கோருவதற்காக நிச்சயமாக நான் நீதிமன்றம் செல்வேன். நீதிமன்றத்திலேயே அவர் அதனை நிரூபிக்கட்டும் என்பது என்னுடைய கருத்தாக இருக்கின்றது.

நாடாளுமன்றத்தில் எனது சிறப்புரிமை மீறப்பட்டிருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷவை பொருத்தமட்டில் இன்று அவர் மனித உரிமை மீறல் தொடர்பில் ஒரு விசாரணை செய்யப்பட வேண்டியவர். ஐ.நா. தீர்மானத்தில் அவருடைய பெயரும் இருக்கின்றது.

எங்களுடைய மக்கள் அவர் மீண்டும் ஆட்சியை பெறக்கூடாது என்பதில் மிகவும் ஆளுமையோடு செயற்பட்டு புதிய ஜனாதிபதியை கொண்டு வந்திருந்தார்கள். அந்தப் புதிய ஜனாதிபதிகூட தற்போது மாறுபட்ட கருத்துக்களை சொல்லி இருக்கின்றார்.

சமஷ்டி முறைமையை கொடுக்க முடியாது, வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது; அவ்வாறு கொடுப்பதாக இருந்தால் தனது இறப்புக்குப் பிறகுதான் அதைக் கொடுக்க முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி இவ்வாறு சொல்லியிருக்கின்றார்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *