14 ஆம் திகதி இறுதிக்கட்டச் சமர் – ரணிலுக்கு எதிராக புலிகளின் பாணியில் மைத்திரி போர்தொடுப்பு!

குதிரைப்பேரம், குத்துக்கரணம், கூ(கா)ட்டிகொடுப்பு என அநாகரீக அரசியலுக்கே உரித்தான அனைத்து சம்பவங்களும் கொழும்பு அரசியலில் நடந்தேறிவருகின்றன. இதனால், 24 மணிநேரமும் அரசியல் களம் கொதிநிலையில் காணப்படுவதுடன், உச்சகட்ட பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.


ரணில் மற்றும் மைத்திரி – மஹிந்த கூட்டணிக்கிடையிலான மோதல் உச்சம் தொட்டுள்ளது. இறுதிநொடிகூட திருப்புமுனையாக அமைவதற்குரிய சாத்தியக்கூறுகளே பிரகாசமாக தென்படுவதால் ‘பல்டி’ அடித்தவர்களும், தாவலுக்கு தயார்நிலையில் இருப்பவர்களும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

மறுபுறத்தில் இலங்கையில் என்ன நடக்கின்றது – நடக்கப்போகின்றது என்பது தொடர்பில் வெளிநாடுகளும், புருவத்தை உயர்த்தி உன்னிப்பாக அவதானித்துவருகின்றன. கொழும்பிலுள்ள தமது நாட்டு தூதரகங்கள் ஊடாக நிலைவர அறிக்கையையும் உடனுக்குடன் பெற்றுவருகின்றன. அரச சார்பற்ற நிறுவனங்களும் உஷார்நிலையிலேயே இருக்கின்றன.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் இன்னும் எட்டு( 14) நாட்களில் நாடாளுமன்றமும் கூடவுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு அதிஉயர் சபையின் ஊடாக தீர்வுகாணப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் 17 ஆம் திகதியானது இலங்கையின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகின்ற முக்கிய நாளாக பார்க்கப்படுகின்றது.

மைத்திரியின் மனம்
மாறியது எப்போது?

2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மஹிந்தவின் காலைவாரிவிட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசிலிருந்து வெளியேறிய மைத்திரிபால சிறிசேன, சிவில் அமைப்புகளின் ஆசியுடன் பொதுவேட்பாளராக களமிறங்கினார்.

தேர்தல் பரப்புரை மேடைகளில் மஹிந்தவுக்கு எதிராக சொற்கணைகளைத் தொடுத்த மைத்திரி, மஹிந்தவை சர்வாதிகாரி, மோசடியாளன், கொலைகாரன், கொள்ளைக்காரன் என்றெல்லாம்கூட விளாசித்தள்ளியிருந்தார்.

இதனால், இவ்விருவரின் இதயங்களும் இறுதிதுடிப்பு உள்ளவரை இனி சங்கமிக்காது என்றே பலரும் கதைத்துக்கொண்டனர். அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே மைத்திரியின் வாயிலிருந்தும் வார்த்தைகள் பறந்தன.

2015 ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக்கனியை ருசித்த மைத்திரி, மஹிந்தவுக்கு எதிராக நேரடியாகவே போர்தொடுக்க ஆரம்பித்தார். சுதந்திரக்கட்சி தலைமைப் பதவியிலிருந்து மஹிந்தவை நீக்கியதுடன், அவரின் சகாக்களையும் களையெடுத்தார். பொதுத்தேர்தலில் மஹிந்தவை ஆதரிக்க வேண்டாம் என நாட்டு மக்களிடம் பகிரங்கமாக கேட்டுக்கொண்டார். இதனால், கடும் சீற்றமடைந்திருந்தாலும் அதை மஹிந்த தரப்பு வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை.

பொதுத்தேர்தலிலும் மஹிந்த தரப்பு தோல்வியடைந்ததால் (95 ஆசனங்கள்) 2020 ஆம் ஆண்டுவரையிலும், அதன்பின்னரும்கூட ஐக்கிய தேசியக்கட்சியுடன் உறவைபேணவே மைத்திரியின் மனமும் ஆசைப்பட்டது. எனினும், மஹிந்த தரப்பால் ஆரம்பிக்கப்பட்ட புதுக்கட்சியானது கோலோச்சும் என அரச புலனாய்வுப் பிரிவாலும், மைத்திரியின் ஆலோசகர்களாலும் வழங்கப்பட்ட அறிக்கையானது, அவரை மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கவைத்தது.

இதையடுத்தே சுதந்திரக்கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் மைத்திரி இறங்கினார். உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களமிறங்கும் முடிவையும் எடுத்தார். இதற்காக ஐக்கிய தேசியக்கட்சியுடனும் மோதல்போக்கையும் கடைபிடிக்க ஆரம்பித்தார்.

பிணைமுறிமோசடி விவகாரத்தை மையப்படுத்தி யானைக்கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்த மைத்திரியும், அவரது சகாக்களும் தம்மை ஊழலுக்கு எதிரானவர்கள் என அடையாளப்படுத்த முயற்சித்தனர். ஆனாலும், தேர்தல் முடிவுகளானவை மைத்திரி தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையிலேயே அமைந்தன. சுதந்திரக்கட்சியின் வரலாற்றில் பெரும் பின்னடைவாக அது பார்க்கப்பட்டது. மறுபுறத்தில் மஹிந்தவின் புகழும் உச்சம் தொட்டது.

இப்படியே பயணித்தால் மலேசிய விமானம்போல், கட்சி காணாமல்போய்விடும் என்ற அச்சத்தாலும், வரலாறு தன்னை இழிவாக பேசக்கூடும் என்பதாலும்மாற்றுவழி குறித்து சிந்திக்க மைத்திரி துவங்கினார். அங்கேதான் அவரது மனமும் மாற்றம்காண ஆரம்பித்தது. வாக்களித்த மக்களைவிட வரலேறே முக்கியம் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

புலிகளின் போர் வியூகத்தை
கையாண்ட மைத்திரி

இலங்கையை போர்மேகம் சூழ்ந்நிருந்த காலப்பகுதியில், ஏதேனுமொரு தாக்குதலுக்கு புலிகள் அமைப்பு தயாராகுமானால், தாக்குதலை தொடுப்பதற்கு முன்னர் பலகோணங்களில் வியூகங்கள் வகுக்கப்படும்.

தாக்குதல் நடத்தப்படும் இடத்துக்கு பல மாதங்களுக்கு முன்னரே புலனாய்வாளர்கள் சென்றுவிடுவர். நிலைமைகளை நோட்டமிட்ட பின்னர் கிளிநொச்சி தலைமையகத்துக்கு தகவல் பறக்கும். அதன்பின்னர் தாக்குதல் படையணி அமைக்கப்படும். இப்படையணி அமைக்கப்பட்டகையோடு முறியடிப்புச்சமர் படையணிகளும் உருவாக்கப்படும். தாக்குதல் படையணி தமது திட்டத்தை முன்வைக்கவேண்டும். அந்த தாக்குதலை படையினர் எவ்வாறு முறியடிக்ககூடும் என்பதை முறியடிப்பு பிரிவினர் சுட்டிக்காட்டுவார்கள்.

இவ்வாறு பலதடவைகள் கலந்தாலோசிக்கப்படும் – பயிற்சிகள் வழங்கப்படும். அனைத்தும் கைகூடிய பின்னரே அதிரடி ஆரம்பமாகும்.

ரணிலுக்கு எதிரான ஆட்டத்தையும் இதேபாணியில்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்தார்.

ரணிலுடன் நெருங்கிப்பழகி – அவருடன் அமைச்சரவையிலும் அலரிமாளிகையிலும் ஒன்றாக அமர்ந்து பலத்தையும், பலவீனத்தையும் கண்டறிந்தார்.

அதன்பின்னர் கருஜயசூரிய, சஜித் பிரேமதாஸ, ரஞ்சித் மத்துவ பண்டார ஆகியோர் மனங்களில் பிரதமராகும் ஆசையை விதைக்க முற்பட்டார். மேற்படி நபர்களிடம் தனித்தனியே பேச்சுகளை நடத்தினார். ஐ.தே.கவின் உயர்மட்ட உறுப்பினரொருவரின் உதவியுடன் ரணிலை விரட்டுவதே மைத்திரியின் குறியாக இருந்தது. எனினும், இதற்கு ஐ.தே.க. தரப்பிலிருந்து பச்சைக்கொடி காட்டப்படவில்லை.

உயர்மட்டத்தின் ஊடாக தாக்குதல் நடத்தமுடியாது என்பதை மைத்திரி அறிந்துகொண்டார். அதன்பின்னர் ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்கள் ஊடாக மற்றுமொரு தாக்குதலுக்கு ‘பிளேன்’ போட்டார். அதன்வெளிப்படையாகத்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. இச்சமரில் மைத்திரி வெற்றியடைவார் என எதிர்பார்க்கப்பட்டாலும் – இறுதிநேரத்தில் ரணில் அதை முறியடித்தார்.

பின்வரிசை அல்லது கீழ்மட்டத்தின் ஊடான தாக்குதலும் சாத்தியமாகாது என்பதையும் புரிந்துகொண்ட மைத்திரி, எதிரி ( ரணில்) இனி விழிப்படைந்துவிடுவார் என்பதால், மஹிந்த அணியின் ஆதரவைபெறும் முயற்சியில் இறங்கினார்.

அந்தபக்கம் களநிலைவரம் எப்படி இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதற்காக 16 பேரை மஹிந்த பக்கம் அனுப்பிவைத்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள பங்காளிக்கட்சி தலைவர்களுடனும் அவசர ஆலோசனை நடத்தினார்.

இறுதிக்கட்ட தாக்குதலுக்கு இதுவே தருணம் என்பதை உணர்த்த மைத்திரி, இறுதிவரை இரகசியம்பேணுமாறு அனைவருக்கும் பணித்தார். பஸில் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டவர்களுடன் பேச்சு நடத்திய பின்னர், மஹிந்தவை பிரதமராக நியமித்தார். இதையடுத்தே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியதுடன், இடியப்பச்சிக்கலிலும் சிக்கியுள்ளது.

14 ஆம் திகதி இறுதிச்சமர்!

இறுதிக்கட்ட போரை மைத்திரி ஆரம்பித்திருந்தாலும் 14 ஆம் திகதியே இறுதிநாளாக பார்க்கப்படுகின்றது. 16 ஆம் திகதியே சமரை முடிப்பதற்கு மைத்திரி திட்டம்போட்டிருந்தாலும் அழுத்தங்கள் வலுத்ததால் 14 ஆம் திகதி முடிவொன்றை காணவேண்டிய கட்டாயசூழ்நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒருபுறத்தில் கோட்டா படையணி, மறுபுறத்தில் பஸில் படையணி, மஹிந்தபடையணி , மைத்திரி படையணியென ‘சக்கரை’ வியூகம் வகுத்து தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது.

இதனால், ஐ.தே.க. உறுப்பினர்கள் மஹிந்தவிடம் சரணடைந்துவருகின்றனர். சம்பிக்க, மனோ, ராஜித, ஹக்கீம், ரிசாட் போன்ற முக்கிய தளபதிகளை நம்பியே ரணிலும் அவரது சகாக்களும் இருக்கின்றனர். பதிலடிகொடுக்க முடியாவிட்டாலும் தமது கட்டுப்பாட்டியிலுள்ள எம்.பிக்களை தக்கவைத்துக்கொள்வதே பெரும் சவாலாக இருக்கின்றது.

வாள் வீச்சு பயணத்தை ஆரம்பிக்கப்போகின்றார் என்ற அறிவிப்பையும் விடுத்தார். அது மஹிந்த அணிக்கு எதிரான அதிரடி நடவடிக்கையாக இருக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இருக்கும் வீட்டுக்குள்ளேயே மைத்திரி வாள்வீசுவார் என எவரும் எதிர்பார்க்கவில்லை. ஐ.தே.க. தற்போது தடுமாறுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

இறுதிக்கப்பட்டப்போரில் புலிகள் சர்வதேசத்தை நம்பியதுபோல், ஐ.தே.கவும் அனைத்துலக சமூகத்தை நம்பியுள்ளது. எது நடக்கும் என்பதை இன்னும் இரண்டு நாட்களில் அறிந்துகொள்ளலாம். அதுவரை காத்திருப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *