பொன்சேகாவை குறிவைத்து மைத்திரியின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்! – பறிபோகின்றது ‘பீல்ட் மார்ஷல்’ பட்டம்

முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் அமைச்சருமான சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பறிப்பதற்கான சட்ட நடைமுறைகள் குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருகிறார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவையும் கொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக நாமல் குமார என்பவர் தகவல் வெளியிட்டிருந்தார். இதன் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகின்றது.

இந்த சதித் திட்டத்தில் சரத் பொன்சேகாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்றும், அதனை மூடி மறைக்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்க அரசு செயற்பட்டது என்றும் ஜனாதிபதி மைத்திரி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தநிலையிலேயே சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பறிப்பதற்கான, சட்ட நடைமுறைகள் குறித்து, ஜனாதிபதி மைத்திரி ஆராய்ந்து வருகின்றார் எனக் கூறப்படுகின்றது.

“பீல்ட் மார்ஷல் பதவியானது, செயற்பாட்டில் உள்ள ஒரு இராணுவ நிலையாகும். அவருக்கு ஒரு பணியகமும், முழுமையான இராணுவப் பாதுகாப்பும் இருக்கின்றது.

சுதந்திர நாள் அணிவகுப்பு,வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான சந்திப்புகளில் அவர் இன்னமும் இராணுவ சீருடையிலேயே பங்கேற்கிறார்.

அவர் இன்னமும் இராணுவ சேவையில் இருக்கின்றார் என்பதை இது தெளிவுபடுத்துகின்றது” என்று ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும், சட்ட நெறிமுறைகளின்படி, பாதுகாப்பு தலைவராக இருப்பதற்கு ஜனாதிபதி அதிகாரம் அளிக்க வேண்டும். எனவே, சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பறிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது எனவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *