போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9 ஆம் திகதி முதல் இழப்பீடு!

யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாகப் பாதிப்புக்களையும், இழப்புக்களையும் சந்தித்த மக்களுக்கு முதற்கட்டமாக எதிர்வரும் 9 ஆம் திகதி இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

இந்த கொடுப்பனவுகள் எதிர்வரும் 9ஆம் திகதி காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 320 நபர்களுக்கும் , அதனைத்தொடர்ந்து நண்பகல் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் 300 நபர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளன.

மாலை யாழ்மாவட்ட செயலகத்தில் 170 பேருக்கான முதல் தொகுதி கொடுப்பனவுகளுக்கான காசோலைகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு புனரமைப்பு அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.

இழப்பீட்டு கொடுப்பனவுகள் வழங்கப்படும் நிகழ்வைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் கோரிக்கைகள் மற்றும் தேவைகளுடன் மக்களையும் சந்தித்து அவர்களுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும் அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இந்த இழப்பீட்டுத் தொகையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமானதாக இல்லை என்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட திட்டங்களை ஏற்படுத்தி மேலும் இழப்பீட்டுக்களைப் பெற்றுக்கொடுக்கவும், எஞ்சியவர்களுக்கும், உரிய இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *