‘பட்ஜட்’ குறித்து 4 ஆம் திகதியே சு.க. இறுதி முடிவு!

வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போது எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து எதிர்வரும் 4 ஆம் திகதியே இறுதி முடிவெடுக்கப்படும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று அறிவித்துள்ளது.

சுதந்திரக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன  தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு இன்று ( 02) இரவு கொழும்பில் கூடியது.

இதன்போது  ‘பட்ஜட்’மீதான இறுதி வாக்கெடுப்பு, மேதினக் கூட்டம், புதிய அரசியல் கூட்டணி உட்பட மேலும்  சில விடயங்கள் தொடர்பில்  விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

குறிப்பாக எதிர்வரும் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறும் ‘பட்ஜட்’மீதான இறுதி வாக்கெடுப்பின்போது அதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என உறுப்பினர்கள் சிலர் ஆலோசனை முன்வைத்துள்ளனர்.

இதற்கு ஆட்சேபனை வெளியிட்ட மேலும் சில உறுப்பினர்கள், ஜனாதிபதி வசமும் அமைச்சுப் பதவிகள் உள்ளன.  பட்ஜட்டை நிறைவேற்றுவதற்குரிய பெரும்பான்மையை ஐக்கிய தேசியக்  கட்சி கொண்டுள்ளது என சுட்டிக்காட்டினர்.

அத்துடன், ‘பட்ஜட்’  தொடர்பில் சுதந்திரக்கட்சி எடுக்கும் தீர்மானமானது மஹிந்த அணியுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஏற்படுத்தும் தாக்கம்  பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதையடுத்தே இவ்விவகாரம் சம்பந்தமாக மஹிந்த ராஜபக்சவுடனும் பேச்சு நடத்தி, 4 ஆம் திகதி மாலை இறுதி முடிவெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம்வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது, சுதந்திரக்கட்சி அதில் பங்கேற்கவில்லை.

எனவே, இறுதிவாக்கெடுப்பின்போது எதிர்த்து வாக்களித்தால் மட்டுமே, புதிய கூட்டணி குறித்த பேச்சு தொடரும் என மஹிந்ந அணி எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *