சர்வாதிகார ஆட்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! – ரணில் திட்டவட்டம்

“அரசமைப்புக்கு முரணான சர்வாதிகார ஆட்சியை எந்தச் சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க முடியாது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நாடாளுமன்றத்திலேயே தீர்வு உள்ளது. அதனால் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இருந்துகொண்டு இன்று மாலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நல்லாட்சி அரசில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதுடன் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறக்கூடிய அமைச்சர் ஒருவரையே பிரதமராக நியமிக்க வேண்டும். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரி பிரதமராக நியமித்தமை அரசமைப்புக்கு முரணானதாகும். இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

நாட்டின் தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் நானே பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்கின்றேன்.

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறு பிள்ளைகளால் கூட நம்ப முடியாத கருத்துக்களை வெளியிடுகின்றார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளைக் காணக்கூடியதாக இருக்கவில்லை.

இலங்கையின் ஊடக சுதந்திரம் கடந்த சில தினங்களாக கேள்விக்குறியில் உள்ளது. அரச ஊடகங்களில் கேட்டுக்கேள்வியின்றி மாற்றங்கள் இடம்பெறுகின்றன.

குறுகிய அரசியல்வாதங்களில் இருந்து விலகி இலங்கையின் எதிர்காலத்திற்காக ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *