சபாநாயகரின் முடிவைப் புறந்தள்ளி நவம்பர் 16 வரை நாடாளுமன்றை ஒத்திவைத்தார் மைத்திரி! – கடும் ஆத்திரத்தில் ரணில்
நாடாளுமன்றத்தை நாளைமறுதினம் திங்கட்கிழமை கூட்ட சபாநாயகர் தீர்மானித்திருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற அமர்வை அடுத்த மாதம் 16ஆம் திகதி வரை அதிரடியாக ஒத்திவைத்துள்ளார்.
கூட்டரசு பிளவடைந்த நிலையில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரி நியமித்துள்ளார்.
இந்தச் செயற்பாடு அரசமைப்புக்கு முரணானது என்றும், நாளை உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறும் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், நாளைமறுதினம் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்திருந்தார்.
இந்தநிலையில், நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரை ஜனாதிபதி முடிவுறுத்தியுள்ளார் என்று நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல இன்று பிற்பகல் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி கூடவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ளவர்களுடன் பேரம் பேசி அவர்களை தம்வசம் இழுக்கும் நோக்குடனேயே மைத்திரி – மஹிந்த கூட்டணி நாடாளுமன்ற அமர்வை அடுத்த மாதம் 16ஆம் திகதி ஒத்திவைத்துள்ளது என அரசில் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் திட்டம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தை உடன் கூட்டினால் அங்கு பெரும்பான்மையைத் தான் நிரூபித்துக் காட்டுவேன் என்று அலரிமாலையில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.