மழை தொடரும்! மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்!!

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான சீரற்ற காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இன்று நாட்டில் மேகமூட்டமான வானம் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், ஊவா, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளில் பலமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மட்டக்களப்பில் இருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு திசையில் இருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளில் இருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10-20 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்” – என்றுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் தப்போவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும் தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும் நேற்றிரவு முதல் திறக்கப்பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலிய ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *