விக்கி தலைமையில் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ உதயம்! – வடக்கு அரசியலில் பெரும் பரபரப்பு

பெரும் எதிர்பார்ப்புக்கும் – பரபரப்புக்கும் மத்தியில் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ என்ற புதிய கட்சியை இன்று புதன்கிழமை யாழ். நல்லூரில் வைத்து அறிவித்தார் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

கட்சி அமைப்புப் பணிகளை தான் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனது அரசியல் எதிர்காலம் குறித்து இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக முன்னாள் முதலமைச்சர் விக்கி ஏற்கனவே கூறியிருந்தார். அவர் இணைத் தலைவராக பதவி வகிக்கும் தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம் நல்லூர் நடராசா பரமேஸ்வரி மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. அதில் உரையாற்றும்போதே விக்னேஸ்வரன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நான் தேர்தலில் நிற்பது சாத்தியமில்லை. தமிழ் மக்கள் பேரவையைத் தலைமையேற்று முன்னெடுப்பதும் பொருத்தமற்றது. எனவேதான் தமிழ் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து தமிழ் தேசியத்தின்பால் பற்றுறுதி உள்ளோரை ஒன்றிணைத்துச் செல்வதே பொருத்தம். தமிழ் மக்கள் விரும்பியபடியே அரசியலில் பயணிப்பேன்.

தமிழ் மக்கள் பேரவையின் அனுசரணையுடன் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கும் நடவடிக்கைகளை நான் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டேன். தமிழ்த் தேசிய கோட்பாடுகளின் வழிநின்று எமது இனத்தின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலையை வென்றெடுத்து மேன்மையை அடைவதற்கு, மனித உரிமைகளை மதித்து நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றும் அனைவரையும் ஒரு குடையின் கீழ் சேர்க்க, இந்தக் கட்சிப் பயணம் உறுதுணையாக அமையும். இதற்கு ‘தமிழ் மக்கள் கூட்டணி’ (Tamil Makkal Kuttani) என்ற காரணப் பெயரை இட்டுள்ளேன்.

என் அன்புக்குரிய மக்களே! இது எனது கட்சி அல்ல. இது உங்களின் கட்சி. நீங்கள் வளர்க்கப்போகும் கட்சி. காலத்தின் அவசியத்தால் உதயமாகும் கட்சி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது கொள்கைகளுக்கு விசுவாசமாக இதுகாறும் நடந்திருந்தார்களேயானால் நான் ஓய்வுபெறப் போயிருப்பேன். ஒரு கட்சியை உருவாக்க என்னைக் கட்டாயப்படுத்திவிட்டார்கள் கூட்டமைப்பினர்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எந்த விதத்திலும் கூறு போட நான் விரும்பவில்லை. எனது குறிக்கோள்கள் சரி என்றால் மக்கள் என் பக்கம் சார்வார்கள். இல்லையேல் என்னை ஒதுக்கி விடுவார்கள். அது மக்களின் விருப்பம்.

எனதினிய தமிழ் மக்களே! அகவை எண்பதில் இன்று காலடி எடுத்து வைக்கும் இந்த வயோதிபனை உங்கள் சேவகனாக்க முன்வாருங்கள். புதிதாக உதயமாகும் உங்கள் கட்சியைக் கையாள கனத்த எம் மக்கள் ஒன்றுதிரள வேண்டும். இன்றுடன் அரசு எனக்களித்த அதிகாரங்கள், சலுகைகள், சார்பான அனுசரணைகள் யாவும் அரசால் திரும்பப் பெறப்படுவன. இப்பொழுது நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. என்னை உரியவாறு உருவாக்குவது உங்கள் பொறுப்பு! என்னை வளர்த்த தமிழ் மக்கள் பேரவைக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து விடைபெறுகின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *