தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு சிங்கள மக்களிடம் ஆதரவுக் கரம் நீட்டுகின்றது கூட்டமைப்பு!

“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்குச் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டத்தைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துள்ளது. சிங்கள மக்களின் ஆதரவு பெறப்பட்டால் அரசியல் கைதிகளின் விடுதலை இலகுவாகும்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் என்று கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) சேர்ந்து எதிர்வரும் 25 ஆம் திகதி கூடுதலான நேரத்தை எடுத்து ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளோம். இதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தெற்கிலே உள்ளவர்களுக்கு அரசியல் கைதிகளின் விவகாரங்களை சரியான விதத்தில் எடுத்துச் சொல்லவேண்டும் என்பதற்காகவே ஜே.வி.பியுடன் சேர்ந்து செய்கின்றோம்.

தீவிர சிங்களக் கட்சிகளும் அமைப்புக்களும் குற்றம் புரிந்த – தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களை எந்தத் தண்டனையும் இல்லாமல் விடுவிப்பதற்கு அரசு உத்தேசிப்பதாகப் பொய்ப் பிரசாரத்தை சிங்கள மக்கள் மத்தியில் செய்கின்றார்கள். அவை திருத்தப்படவேண்டும்.

நீண்ட காலம் தடுப்பில் அவர்கள் உள்ளார்கள் என்றும், வழக்கு முடிந்து தண்டனை கொடுக்கப்பட்டாலும், வழக்கு முடிவதற்கு முன்னரில் இருந்தே அவர்கள் தண்டனை அனுபவதித்து வருகின்றார்கள் என்பதையும் சிங்கள மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதனாலேயே இப்படியான ஒரு ஒத்திவைப்புப் பிரேரணையை முன்வைக்கவுள்ளோம்.

அரசியல் கைதிகளும் தாங்கள் எழுதிய கடிதத்தில், தாங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும், நீண்டகாலத் தண்டனையை அனுபவித்து வருவதைக் கருத்தில்கொண்டு, தமக்கு புனர்வாழ்வு அழித்து விடுதலை செய்யுமாறே கோரியுள்ளார்கள்.

இந்த உண்மையை சரியான விதத்தில் சிங்கள மக்கள் மத்தியில் தெரியப்படுத்தினால், அவர்களிடம் இருந்து பாரிய ஆதரவு கிடைக்கும்.

அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பில் சிங்கள மக்கள் சரியான புரிதல் இல்லாத காரணத்தினாலேயே எதிர்ப்புகள் எழுகின்றன.

உண்மையாக நிலையை அவர்களுக்குத் தெரிவித்தால் நியாயமாகச் சிந்திக்கும் எந்தச் சிங்களவரும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கு ஆதரவு தருவார்கள்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *