வடக்கு, கிழக்கில் தொல்பொருள் அழிப்பு இடம்பெறவில்லை! – இப்படிக் கூறுகின்றது அரசு

வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட அடிப்படையில் தொல்பொருள் அழிப்பு இடம்பெறவில்லை என்று உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அமைச்சரவை விளக்க நேரத்தின்போது அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு , கிழக்கில் திட்டமிட்ட அடிப்படையில் தொல்பொருட்கள் அழிக்கப்படுகின்றன என்று கூறி இனவாதத்தைத் தூண்டுவதற்குச் சிலர் முற்படுகின்றனர். நாடு முழுவதிலும் கடந்த இரண்டரை வருடங்களில் தொல்பொருள் சட்ட மீறல்கள் சம்பந்தமாக 671 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தொல்பொருள் திருட்டு தொடர்பாக 36 சம்பவங்களும் , தொல்பொருள் அழிப்பு தொடர்பாக 75 சம்பவங்களும், சட்டவிரோத புதையல் தோண்டுதல்கள் தொடர்பாக 505 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

வடக்கு, கிழக்கு மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் அங்கு அதிகமான தொல்பொருள் அழிப்புச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

தொல்பொருள் அழிப்பு, திருட்டு, சட்டவிரோதமாக தோண்டியெடுத்தல் போன்ற சம்பவங்கள் அநுராதபுரத்திலேயே அதிகம் பதிவாகியுள்ளன. யாழ்.மாவட்டத்தில் ஒரேயொரு முறைப்பாடு மட்டுமே பதிவாகியுள்ளது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *