தடுப்பூசி போட்டுக் கொண்ட 7 பேர் ரத்தம் உறைந்து உயிரிழப்பு!

அஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போட்டுக் கொண்ட 7 பேர், ரத்தம் உறைந்து பாதிக்கப்பட்டு பலியாகி இருப்பதாக இங்கிலாந்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இதற்கிடையே, பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசிகள் பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ரஜெனகா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது.

இதே போல், அஸ்ட்ரஜெனகாவின் தடுப்பூசி பல நாடுகளிலும் பல்ேவறு பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த தடுப்பூசி போட்டவர்களுக்கு ரத்தம் உறைந்து பாதிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகளும் வேறு பல நாடுகளும் மருந்துக்கு தடை விதித்துள்ளன. ஆனாலும், உலக சுகாதார நிறுவனம் எந்த தடையும் விதிக்கவில்லை. இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து அஸ்ட்ரஜெனகா மருந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24ம் தேதி வரையிலான கணக்கெடுப்பில் 1 கோடியே 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், 30 பேருக்கு ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதில் 7 பேர் இறந்துள்ளதாகவும் இங்கிலாந்து அரசு அதிர்ச்சித் தகவலை நேற்று வெளியிட்டுள்ளது.

ஆனாலும், அவர்கள் மரணத்திற்கு தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுதான் காரணமாக என்பது குறித்து எந்த ஆதாரமும் இல்லை. இதுதொடர்பான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனாலும், இந்தியாவைப் பொறுத்த வரையில் இதுவரை கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட யாருக்கும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் இல்லை என்றே மத்திய அரசு கூறி வருவது குறிப்பிடத்தக்கது. நேற்றைய  காலை நிலவரப்படி இந்தியாவில் 7 கோடியே 90 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

வங்கதேசத்தில் முழு ஊரடங்கு
வங்கதேசத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 6,830 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் 50 பேர் பலியாயினர். இதனால், நாளை முதல் ஒரு வாரத்திற்கு மீண்டும் முழு ஊரடங்கு அங்கு அமல்படுத்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அனைத்து அலுவலகங்கள், நீதிமன்றங்கள் மூடப்பட்டிருக்கும். தொழிற்சாலைகள், மில்கள் மட்டும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் பாதிப்பு 89,129; பலி 714
* இந்தியாவில் தினசரி பாதிப்பு 90 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 89,129 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
* கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் 20ல் 92,605 பேர் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு தற்போதுதான் முதல் முறையாக தினசரி பாதிப்பு 90 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
* நேற்று ஒரேநாளில் 714 பேர் பலியாகி உள்ளனர். கடந்த அக்டோருக்கு பிறகு அதிகபட்ச தினசரி பலி எண்ணிக்கை இது.
* மொத்த பாதிப்பு 1.23 கோடியாகவும், மொத்த பலி 1 லட்சத்து 64,110 ஆகவும் அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 58,909 ஆக அதிகரித்துள்ளது.
* நேற்று ஒரே நாளில் 44,202 பேர் குணம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *