அரசியலமைப்பு சபை செயலிழந்ததால் புதிய தலைமை நீதியரசரை நியமிப்பதில் சிக்கல் – பிரதமரின் வருகைக்காக அனைவரும் காத்திருப்பு!

அரசியலமைப்பு சபைக்கான ஆறு உறுப்பினர்கள் இன்னமும் நியமிக்கப்படாமல் இருப்பதால், புதிய தலைமை நீதியரைசரை நியமிக்கும் நடவடிக்கைகளில் சிக்கல் எழுந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் தற்போதைய தலைமை நீதியரசர் பிரியசாத் டெப் எதிர்வரும் 12ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ளார்.

இதையடுத்து, புதிய தலைமை நீதியரசரை, ஜனாதிபதி  முன்மொழிய வேண்டும். அதனை அரசியலமைப்பு சபை அங்கீகரிக்க வேண்டும்.

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய, ஆணைக்குழுக்கள் மற்றும் உயர் பதவிகளுக்கான நியமனங்கள் சபாநாயகர் தலைமையிலான 10 பேர் கொண்ட அரசியலமைப்புச் சபையினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

எனினும், 10 பேர் கொண்ட அரசியலமைப்புச் சபையின் 6 உறுப்பினர்களின் 3 ஆண்டு பதவிக்காலம், கடந்த செப்ரெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. புதிதாக 6 உறுப்பினர்கள் அரசியலமைப்புச் சபைக்கு நியமிக்கப்படுவதில் இழுபறியான நிலை காணப்படுகிறது.

அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்கள் வரும் 10ஆம் நாள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று தெரிவித்தார்.

பிரித்தானியாவில் தற்போது தங்கியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்..

அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்டதும், அந்தப் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.

எனினும், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அரசியல் கட்சிகளுடன் இணைந்து பிரேரிக்க வேண்டிய ஐந்து உறுப்பினர்களின் பட்டியல் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.

அதேவேளை, சிறிலங்கா ஜனாதிபதி தனது பிரதிநிதியாக அமைச்சர் மகிந்த சமரசிங்கவை ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இதற்கிடையே அரசியலமைப்பு சபையின் உறுப்பினர் பதவிக்கு சிவில் சமூகப் பிரதிநிதிகளில் இருந்து,  கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் மூத்த விரிவுரையாளரான என்.செல்வக்குமரன், கல்வியாளரும், இராஜதந்திரியுமான ஜாவிட் யூசுப், முன்னாள் இராஜதந்திரி ஜெயந்த தனபால ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும், ஜெயந்த தனபாலவை நியமிப்பதற்கு சில தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவின் பெயர் முன்மொழியப்பட்டது. அதற்கு கூட்டு எதிரணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியலமைப்பு சபைக்காள புதிய உறுப்பினர்களை நியமிக்கும் விடயத்தில் இழுபறிகள் நீடித்து வரும் நிலையில், புதிய தலைமை நீதியரசர் நியமனத்தில் சிக்கல்கள் எழுந்துள்ளன.

வரும், 12 ஆம் திகதி தற்போதைய தலைமை நீதியரசர் ஓய்வுபெற்ற பின்னர், புதிய தலைமை நீதியரசரை, அரசியலமைப்பு சபையின் அனுமதியுடன் சிறிலங்கா அதிபர் நியமிக்க வேண்டும்.

அரசியலமைப்பு சபை செயற்பட முடியாத நிலையில் இருப்பதால், தற்காலிகமாக, பதில் தலைமை நீதியரசர் ஒருவரை நியமிக்க வேண்டிய நிலை சிறிலங்கா அதிபருக்கு ஏற்படலாம்.

14 நாட்களுக்கு பதில் தலைமை நீதியரசரை நியமிக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு உள்ளது.

அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்கள் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டால், மூத்த உச்சநீதிமன்ற நீதியரசர் ஈவா வணசுந்தர பதில் தலைமை நீதியரசராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்களை நியமிப்பது குறித்து தாம் பேச்சு நடத்தவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நோர்வேக்கு புறப்பட முன்னரும் இதுபற்றி பேசியிருந்ததாகவும், அவர் நாடு திரும்பியதும், அவரைச் சந்தித்து பேசி முடிவெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *