இலங்கையில் வாழும் ஆபிரிக்க இனத்தவர்கள்

இலங்கையிலுள்ள தேசிய இனங்கள் எத்தனை என்கிற கேள்விக்கு பொதுவாக தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பறங்கியர் மற்றும் வேடர்கள் என்ற ஐந்து இனக்குழுக்களையே இலங்கையர்களாகக் குறிப்பிடுவார்கள். ஆனால் இந்தச் சிறிய தீவில், ஒட்டுமொத்தமாக 24 இன மக்கள் வாழ்வது  நாம் அறியாத ஒன்றாகும். விஜயன் வருகைக்கு முதலிருந்தே பல்வேறு இனக்குழுக்கள் இலங்கையில் வாழ்ந்துவந்தது மட்டுமின்றி இந்தியப் படையெடுப்புகள் , வெளிநாட்டு வர்த்தகங்கள் மற்றும் காலனித்துவ ஆட்சியின் தாக்கம் போன்றன, இந்தப் பன்முக இனப்பரம்பலை விரிவாக்கிய காரணிகளாகும்.

ஆங்கிலேயர் காலத்தில் தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்வதற்காக கணிசமான தென்னிந்திய மக்கள் மலையகத்தில் வேலை செய்தனர்.ஆனாலும், முதன்முதலாக இலங்கையில் காலனித்துவ ஆட்சிமுறையை ஸ்தாபித்த போர்த்துக்கீசர், தமது ஆட்சிப்பரப்பில் இருந்த கறுவாத் தோட்டங்களில் பணி புரிவதற்காக , தமது காலனித்துவ நாடான ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டிலிருந்து பல ஆபிரிக்கக் குடிமக்களை இலங்கையின் மேற்குப் பாகத்தில் குடியமர்த்தினர்.மேலும் இலங்கையில் போர்த்துக்கீசப் படைப்பிரிவில் ஆபிரிக்க இனத்தவரின் பங்கானது மிகவும் முக்கியமானது.இருப்பினும், கி.பி.1658ல் போர்த்துக்கீசர் இலங்கையை விட்டு ஒல்லாந்தரால் கலைக்கப்பட்ட பின்னர் இந்த ஆபிரிக்க வம்சாவளி மக்கள் இலங்கையின் சுதேசிய மக்களோடும் கலக்கத் தொடங்கினர்.

இந்த ஆபிரிக்க வாரிசுகளை Kaffir (தமிழில் காப்பிலி) என்னும் சொல்லாலேயே பலரும் அடையாளப்படுத்துவர்.இன்றைக்கு இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த kaffir மக்களின் எண்ணிக்கையானது, ஏறத்தாழ 1000 மட்டுமே ஆகும்.இன்றைய புத்தளம் மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் வாழும் இவர்கள் தமது தாய் மொழியினை மறந்தாலும்,  தமது தனித்துவமான கலையான “kaffiringna” எனும் நடனத்தையும் இசையையும் தொடர்ந்து பேணியவண்ணமே உள்ளனர்.இவர்கள் குறிப்பாக புத்தளத்தின் “சிரம்படிய” எனும் கிராமத்தில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.

புத்தளத்தில் வாழும் Kaffir இன மக்கள் பெரும்பாலும் தமிழன் மொழி மற்றும் சிங்கள மொழியினைப் பேசிவருவதோடு ரோமன் கத்தோலிக்க சமயத்தையே தொடர்ந்தும் பின்பற்றுகிறார்கள்.சொற்ப எண்ணிக்கையிலானவர்களே போர்த்துகீசியப் பறங்கி மொழியினைப் பயன்படுத்துகிறார்கள்.இவர்கள் இன்று  தமிழர்கள் மற்றும் சிங்கள இனத்தவருடன் திருமணத்தொடர்பினை ஏற்படுத்திவருவதால், இவர்களுக்குரிய தனித்துவமான பல அம்சங்கள் அருகி வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
Kaffir இனத்தவர் பற்றிய  இலங்கை அரசாங்கத்தின் விழிப்புணர்வானது கடந்த பத்து ஆண்டுகளுக்கு உள்ளே தான் உருவாகியது எனலாம்.இவர்களின் தனித்துவமான கலாசாரத்தை காக்கவேண்டியதன் கடப்பாட்டினை உணர்ந்த கலாசாரம் அமைச்சானது ,  இவர்களை ஊக்குவிப்பதற்காக இவர்களுக்குரிய மேடையினை அவ்வப்பொழுது வழங்கியே வருகின்றது.
கிட்டத்தட்ட 450 வருடங்களுக்கு மேலாக இலங்கைத் தீவில் வசித்து வரும் இந்த ஆபிரிக்க வம்சாவளி மக்கள்,  தமது வரலாற்றினை வாய்மொழி மூலமாகவே பேணி வந்துள்ளனர்.போர்த்துக்கீச ஆட்சியாளர்களால் இவர்கள் இலங்கைக்குப் படைவீரர்களாகக் கொண்டுவரப்படத்தோடு ,  கண்டி மன்னனுக்கு எதிரான போர்களிலும் இவர்கள் பங்குகொண்டுள்ளார். குறிப்பாக பலனை போர், றன்தெனிகலைப் போர் மற்றும் தந்துரே போர் போன்ற போர்களில் போர்த்துகீசப் படைப்பிரிவில் இவர்கள் இருந்ததற்கான வரலாறுப் பதிவுகள் இன்னும் உள்ளன.மேலும் கண்டி மன்னர்கள் தமது கறுவாத் தோட்டங்களில் பணிபுரிவதற்கு இவர்களைப் பயன்படுத்தியுள்ளனர
என்னதான் இவர்கள் ஆப்பிரிக்க வம்சமாக இருந்தாலும் ,  இவர்கள் இன்று இலங்கையின் குடிமக்களே ஆவர். பெரும்பான்மை சிறுபான்மை என்ன மோதிக்கொள்ளும் நாங்கள் , இலங்கைத் தீவில் தமக்கென ஒரு முகவரியைக் கூட தேடமுடியாத இவர்களைப் போன்ற மிகவும் மறக்கப்பட்ட சமூகங்களை பற்றி சரியான புரிதல்களைப் பெறுவோமேயானால் , இலங்கைத் தீவில் நிலையான சமாதானத்தையும், ஆரோக்கியமான இலங்கையர்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *