மாவீரர் தினத்துக்கு இம்முறை தடை! – புருவத்தை உயர்த்துகின்து இராணுவம்

தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும், இந்த விடயம் குறித்து பாதுகாப்பு தரப்பு இம்முறை விழிப்பாகவே இருக்கின்றது என்றும் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க திட்டவட்டமாக அறிவித்தார்.

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு அநுராதபுரம் ஜயசிறி விகாரையில் நேற்று விசேட பூஜை வழிபாடு நடைபெற்றது.
இராணுவத் தளபதி உட்பட இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இதில் பங்கேற்றிருந்தனர்.
ஆன்மீக வழிபாடு முடிவடைந்த பின்னர், வடக்கில் இம்முறை மாவீரர் தினத்தை பேரெழுச்சியுடன் அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து உங்களின் நிலைப்பாடு என்னவென்று பிராந்திய ஊடகவியலாளர்கள் இராணுவத் தளபதியிடம் வினவினர்.
இதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“மாவீரர் தினத்தை மட்டுமல்ல புலிகளை நினைவுகூரும் எந்தவொரு நிகழ்வையும் நடத்த இடமளிக்கமுடியாது. இந்த விடயத்தில் நாம் விழிப்பாகவே இருக்கவேண்டும். எனினும், எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூரமுடியும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் போதைப்பொருளை ஒழிப்பதற்கு இராணுவம் தலையிடவேண்டும் என மகாநாயக்க தேரர்களால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த இராணுவத் தளபதி,
“தற்போதும் இந்நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டு வருகின்றது. எனினும், எமக்கு சட்டபூர்வமான அதிகாரங்கள் அவசியம். அவற்றை அரசு வழங்கும் என நம்புகின்றோம். அவ்வாறு வழங்கப்பட்டால் வெற்றிகரமாக இல்கை அடைவோம்” என்றார்.
அதேவேளை, வடக்கில் இயங்கும் வன்முறைக் குழுக்கள் முற்றாக ஒழிப்பதற்கு இராணுவத்துக்கு பொலிஸ் அதிகாரங்களையும் இராணுவத் தளபதி கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *