வவுனியாவில் நகர சபைக்கும் ஓட்டோச் சாரதிகளுக்கும் இடையில் வெடித்தது மோதல்!

வவுனியா புதிய பஸ் நிலையத்தின் முன்னால் நகர சபைக்கும், ஓட்டோ உரிமையாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று இன்று சனிக்கிழமை ஏற்பட்டது.

புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்ட காலத்தில் இருந்து தொடர்ச்சியாக தனியார் மற்றும் இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கிடையில் முரண்பாடான நிலைமை காணப்படுகின்றது.

இந்நிலையில் பஸ் நிலையத்துக்கு முன்பாக பஸ்களை நிறுத்த முடியாதென வவுனியா நகர சபையால் சமிக்ஞைப் பலகை அமைக்கப்பட்டபோது, ஓட்டோ உரிமையாளர்களுக்கும் நகர பிதாவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

புதிய பஸ் நிலையத்துக்குள் வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பஸ்கள் உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாகாணங்களுக்கிடையிலான சேவையில் ஈடுபடும் பஸ்கள் வீதியோரத்தில் தரித்து நின்றே சென்று வருகின்றன.

ஆகையால் அந்தப் பகுதியிலுள்ள மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில், தமது வீடுகளுக்கு முன்பாக பஸ்கள் நிறுத்துவதைத் தடை செய்யுமாறு கோரி அப்பகுதி மக்கள் வவுனியா நகரசபையிடம் முறைப்பாடு தெரிவித்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய, வவுனியா நகரபிதா இ.கௌதமனின் ஏற்பாட்டில் பஸ்களைச் சில மீற்றர் தூரம் சென்று மக்கள் வசிக்காத பகுதியில் நிறுத்துவதற்கு ஏதுவாக, வாகனம் நிறுத்துவதற்குத் தடை செய்யும் சமிக்ஞைப் பதாதைகளை அமைக்க நகரசபை ஊழியர்கள் பணியை முன்னெடுத்தனர்.

இதன்போது ஓட்டோச் சாரதிகள் இதற்கு எதிர்ப்புப் தெரிவித்தனர். அங்கவீனர்கள் புதிய பஸ் நிலையத்திற்கு வருவதற்குச் சிரமங்களை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும் எனவும், மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் தம்மால் கட்டணங்களைக் பெறமுடியாது என்பதால் புதிய பஸ் நிலையத்துக்கு முன்பாகவே மாகாணங்களுக்கிடையிலான பஸ்களை நிறுத்திச் செல்லவேண்டும் அல்லது பஸ் நிலையத்துக்குள்ளே பஸ்கள் செல்ல அனுமதிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.

பின்னர் வாகனத் தரிப்புக்குத் தடை விதிக்கும் சமிக்ஞைகளை அமைக்கவிடமாட்டோமென வவுனியா நகரபிதாவுடன் முறுகலில் ஈடுபட்டனர். இதனையடுத்துச் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறும் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுப்பதாகத் தெரிவித்த நிலையில், நகரசபையினர் தமது பணியை இடைநிறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *