போதநாயகியை அடித்துக் கொடுமைப்படுத்தினார் செந்தூரன்! மரணத்துக்கும் அவரே காரணம்!! – நீதி வேண்டி கதறியழுகின்றார் தாயார்

“எனது மகள் தற்கொலை செய்வதற்குத் துணிந்தவள் அல்ல. பிள்ளையின் மரணத்துக்கு அவரின் கணவர் செந்தூரனே காரணம். அவர் மீதே எனக்குச் சந்தேகம். எனவே, போதநாயகியின் மரணத்துக்கு நீதி வேண்டும்.”

– இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் தாயார் தெரிவித்தார்.

போதநாயகியின் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் தற்கொலையா அல்லது திட்டமிடப்பட்ட படுகொலையா என்பது தொடர்பில் சிக்கல் நிலை நீடிக்கின்றது.

இந்நிலையில், உயிரிழந்த தனது மகள் போதநாயகியை அவரது கணவரான செந்தூரன் பல்வேறு வகையில் கொடுமைப்படுத்தி வந்தார் என்றும், அவரது மரணத்துக்கு செந்தூரனே காரணம் என்றும் கதறியழுதவாறு கூறினார் தாயார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போதநாயகி திருமணமான காலம் முதல் அவர்களுடைய குடும்பத்தில் பல பிரச்சினைகள் இடம்பெற்று வந்தன. அவருடைய கணவன் செந்தூரன் என்பவரால் பல கொடுமைகளுக்கு அவர் உட்பட்டிருந்தார்.

எனது மகளை செந்தூரன் அடித்துத் துன்புறுத்துவார். ஒருநாள் அவரின் தாக்குதலுக்குள்ளான எனது மகள் கீழே விழுந்து அரை மணித்தியாலங்களுக்கு மேல் மயக்கமடைந்திருந்தார். நான்தான் தண்ணீர் தொளித்து அவரை எழுப்பினேன்.

போதநாயகியின் மரணம் தொடர்பாக கேள்வியுற்று அதிர்ச்சி அடையாமல் சாதாரணமாக திருகோணமலைக்கு வந்தார் செந்தூரன். சடலத்தை தனது வீட்டில் வைக்க வேண்டும் என்று எம்முடன் முரண்பட்டார். எனது மகளின் இறுதிக்கிரியைக்குக்கூட செந்தூரன் வரவில்லை” – என்றார்.

போதநாயகியின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை வேண்டும் எனக் கோரி கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் நேற்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே போதநாயகியின் தாயார் மேற்கண்டவாறு கூறினார்.

“போதநாயகியின் மரணம் தற்கொலையாயின் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். அல்லது கொலையாயின் கொலைக்குக் காரணம் என்ன? யாரால் கொலைசெய்யப்பட்டார்? என்பவை தெரியவர வேண்டும். குற்றவாளிகள் பக்கச்சார்பின்றி தண்டிக்கப்பட வேண்டும்” என்று இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *