கிழக்கில் தமிழ், முஸ்லிம்களை மோதவைக்க நாமல் குமாரவுக்கு பிரான்ஸிலிருந்து நிதி உதவி!

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே மோதலை ஏற்படுத்தி – கொரில்லாத் தாக்குதல்களை நடத்தத் திட்டம் வகுக்குமாறு தனக்கு பிரான்ஸிலிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டது என மற்றுமொரு பரபரப்பு தகவலை அம்பலப்படுத்தினார் நாமல் குமார.

பிரான்ஸிலுள்ள துஷார பீரிஸ் என்பவரே இதற்கான கட்டளையைப் பிறப்பித்தார் என்றும், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் ஆலோசனையின் பிரகாரம் நிதியைப் பெற்றுக்கொண்டதாகவும் கூறிய நாமல்குமார், காசோலை, பற்றுச்சீட்டு விபரங்களையும் வெளியிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் கொலைசெய்வதற்கு சூழ்ச்சி வகுக்கப்பட்டதாகவும், பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதி ப்பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் ஊடாகவே இது அரங்கேற்றப்படவிருந்தது என்றும் திடுக்கிடும் தகல்களை குரல் பதிவுகள் சகிதம் அண்மையில் அம்பலப்படுத்தினார் நாமல்குமார.

இதையடுத்து இவ்விவகாரமானது தெற்கு அரசியலிலும் பெரும் புயலைக்கிளப்பிவிட்டது. இந்நிலையில், இந்தியப் பிரஜையொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதால் இதன்பின்னணி படுபயங்கரமாக இருக்கும் என அரசியல் பிரமுகர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறானபின்புலத்திலேயே நேற்று விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி மேலும் பல தகவல்களை நாமல் குமார வெளியிட்டார்.

“முஸ்லிம் அமைச்சர்களை கொலைசெய்வதற்கும், பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டது. அதுமட்டுமல்ல கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே மோதலை ஏற்படுத்தி கொரில்லா முறையில் தாக்குதல் நடத்தி – புலம்பெயர் அமைப்புகளின் நிதியைப் பெறலாம் என்பதே பிரான்ஸிலுள்ள துஷார பீரிஸின் திட்டமாக இருந்தது.

இதற்காக அவர் எனக்கு நிதி அனுப்பிவைத்தார். பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் ஆலோசனையின் பிரகாரம் அதனைப் பெற்றேன். விவரங்களை ரி.ஐ.டிக்கு விசாரணைக்கு அனுப்பிவைத்தேன். எனவே, பைல்களைப் புரட்டினால் மேலும் பல தகவல்கள் அம்பலமாகும். எனது தொலைபேசியை முறையாக ஆய்வு செய்தால் இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *