அரசமைப்பின் நகல் வடிவத்தை ஆராய ஒக்.25இல் கூடுகின்றது நாடாளுமன்றம்!
அரசமைப்பு வழிகாட்டல் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய அரசமைப்புக்கான நகல் வடிவம் குறித்து ஆராய்வதற்கான, நாடாளுமன்றம் அரசமைப்புப் பேரவையாக மீண்டும் ஒக்டோபர் 25ஆம் திகதி கூடவுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற புதிய அரசமைப்புக்கான வழிகாட்டல் குழுவில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழு நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது.
ஏற்கனவே, வழிகாட்டல் குழுவின் கூட்டங்களில் கூறப்பட்ட கருத்துகள், வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள், அந்த இடைக்கால அறிக்கை மீதான அரசமைப்புப் பேரவையின் அமர்வுகளில் தெரிவிக்கப்பட்ட அம்சங்கள், வழிகாட்டல் குழுவின் உப குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கைகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து புதிய அரசமைப்புக்கான நகல் வடிவமாகக் கொள்ளத்தக்க ஒரு மாதிரியை நிபுணர் குழு தயாரித்திருந்தது என்பது தெரிந்ததே.
அதன் ஆங்கில வடிவம் ஏற்கனவே வழிகாட்டல் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
நேற்று சிங்கள, தமிழ்மொழி பெயர்ப்பு வடிவங்கள் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறப்பட்ட போதிலும், சிங்கள வடிவமே சமர்ப்பிக்கப்பட்டது. தமிழ் வடிவம் சில தினங்களில் தயாராகும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆங்கில மூல வடிவத்துடன் சிங்கள வடிவத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருப்பதால் அதற்கு நேரம் வேண்டும் என்றார் பொது எதிரணியின் எம்.பியான தினேஷ் குணவர்த்தன.
தமிழ் வடிவம் கைக்குக் கிடைத்தால் அதையும் தாங்கள் ஒப்பிட்டுப் பார்க்க போதிய அவகாசம் தேவை என்றார் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.
ஆகவே, தமிழ் வடிவத்தை விரைவில் பெற்றுக் கொடுப்பது என்றும், அவற்றின் மொழிபெயர்ப்பை ஆராய்ந்து தீர்மானிப்பதற்காக வழிகாட்டல் குழுவை ஒக்டோபர் 11ஆம் திகதி ஒரு தடவை கூட்டுவது என்றும், அரசமைப்பு நகல் வடிவத்தை ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தை அரசமைப்பு பேரவையாக ஒக்டோபர் 25ஆம் திகதி கூட்டுவது என்றும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நேற்றைய கூட் டமும் பெரும் கருத்து மோதல்கள், வாக்குவாதங்களின்றி இணக்கமான சூழ்நிலையில் நடந்தேறியமை குறிப்பிடத்தக்கது.