“அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்!” – ‘ஏ 9’ பிரதான வீதியை மறித்து வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளுக்குப் பலம் சேர்க்கும் வகையிலும் வவுனியா நகரில் வீதியை மறித்து இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.

வவுனியா பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியால் ஏ – 9 பிரதான வீதி சுமார் 20 நிமிடங்கள் வரை மூடப்பட்டிருந்தது.

பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பமான பேரணி பஜார் வீதியூடாக ஹொரவப்பொத்தானை வீதியைச் சென்றடைந்து அதனூடாக வவுனியா மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது.

“இளைஞர்களாக கைதுசெய்யப்பட்டவர்கள் தங்கள் வாழ்வின் அரைவாசிக் காலத்தை சிறைகளில் கழித்து இன்று முதியவர்களாகி விட்டார்கள். இன்றைய நல்லாட்சி அரசு இந்த 137 அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமலும், விசாரணைகளின்றியும் வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும். எனவே, நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்ய வேண்டும்” என்று இதன்போது வலியுறுத்தப்பட்டது.

அதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்ததுடன் விண்ணதிரக் கோஷமும் இட்டனர்.

பேரணியாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவுள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு அருகில் ஒன்றிணைந்த பின்னர் பேரணியின் ஏற்பாட்டுக் குழுவின் பேச்சாளர் தயாவின் உரையுடன் போராட்டம் நிறைவுபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பல்வேறு கட்சிகளின் அரசியல்வாதிகள், பொது அமைப்பினர், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *